ஆன்மீக பூமியான தமிழகத்தில் இறந்த கழுகிற்கு ஈமச்சடங்கு – உயிர்கள் யாவையும் வணங்கச் செய்யும் சனாதன தர்மம்

ஆன்மீக பூமியான தமிழகத்தில் இறந்த கழுகிற்கு ஈமச்சடங்கு – உயிர்கள் யாவையும் வணங்கச் செய்யும் சனாதன தர்மம்

Share it if you like it

சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை அடுத்த திம்மராயன் பாளையம் கிராமத்தில் இறந்து கிடந்த கழுகிற்கு மனிதர்களைப் போலவே உரிய வகையில் ஈமச்சடங்கு செய்திருக்கிறார்கள். இறந்த கழுத்திற்கு தாமாக முன்வந்து அவரவர் பங்களிப்போடு உரிய மரியாதையுடன் தகனம் செய்து கழுகிற்கு ஈமச்சடங்குகளை கிராம மக்கள் செய்து முடித்திருக்கிறார்கள். உயிரிழந்த கழுகிற்கு ஈமச்சடங்கு செய்தால் மழை வரும் என்ற அவர்களின் நம்பிக்கை மெய்ப்பட்டு இறுதிச்சடங்கு செய்துவிட்டு இடுகாட்டில் இருந்து வீடு திரும்பவதற்குள் அந்தப் பகுதியில் நல்ல மழை பெய்து அவர்களின் நம்பிக்கையும் இந்த மண்ணின் சனாதன தர்மமும் எவ்வளவு மகத்தானது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது..

சனாதான தர்மத்தில் இறந்தவர்கள் தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் தான் இறந்த உடல்களை தூய்மையாக குளிப்பாட்டி தெய்வத்திருமேனிகளுக்கு செய்வது போல அபிஷேகங்கள் சேவித்து பூமாலையும் துளசி வில்வம் என்று இறை வஸ்துக்களையும் சாற்றி புதிய வஸ்திரங்கள் அணிவித்து ஆண்கள் எனில் விபூதி சந்தனம் குழந்தைகள் பெண்கள் எனில் மஞ்சள் குங்குமம் என்று மங்களப் பொருட்கள் அணிவித்து உரிய மரியாதையோடு அவர்களை தகனம் செய்வது வழக்கம். அதன் பிறகு அவர்களுக்கு உரிய ஈமச்சடங்குகளையும் அவரவர் பண்பாடு பாரம்பரிய வழியில் செய்து வருவது இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால் இது மனிதர்களுக்கு மட்டும் நடைமுறையில் இருக்கும் ஈமச்சடங்கு நடைமுறை இல்லை. நாம் தெய்வம்சமாக வழிபடும் பால் கொடுக்கும் பசுக்கள் கன்றுகள் உழவிற்கு உறுதுணையாக இருக்கும் காளைகள் கோவில்களில் வலம் வரும் கோவில் காளைகள் ஜல்லிக்கட்டு காளைகள் என்று பாரம்பரியமாகவும் இறை அடையாளமாகவும் விளங்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எருதுகளுக்கும் கூட தம்மில் ஒருவராக கருதி துக்கத்தை வெளிப்படுத்துவதும் மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் உரிய வகையில் ஈமச்சடங்கு செய்வதும் வழக்கம்.

வீட்டில் வளர்க்கும் நாய் பூனை பறவைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு கூட அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஈமச்சடங்கு செய்வது வழக்கமாக இருக்கிறது. ஆனால் பார்த்தால் நாம் அஞ்சி நடுங்கும் விஷ பாம்புகளுக்கு கூட அது இறக்கும் பட்சத்தில் அதற்கு உரிய வகையில் தகனம் மரியாதை செய்வது நம் சனாதன மரபு . அந்த வகையில் விஷ பாம்புகள் கருநாகம் செந்நாகம் என்று பார்த்தவுடன் படையும் நடுங்கும் பாம்புகளை கூட இயற்கையாக மரணித்திருந்தாலும் அல்லது தற்காப்புக்காக அடித்துக் கொன்றாலும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மரணித்தாலோ அதற்கு உரிய வகையில் பல்வேறு முறைகளில் மனிதர்களுக்கு போலவே ஈம சடங்கு செய்வதும் பால் வைத்து இறுதி வழிப்பாடு செய்வதும் இன்றளவும் இங்கு மரபாக இருக்கிறது.

அனுமனின் அம்சமாக கேதுவின் பிம்பமாக கருதப்படும் குரங்குகள் உயிரிழந்தால் அதற்கு இறைவழிபாட்டுடன் கூடிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்வதும் இறுதிச் சடங்கு செய்த பதினாறாவது நாளில் அருகில் இருக்கும் ஹனுமன் கோவிலிலோ அல்லது விஷ்ணு ஆலயத்திலோ அந்த குரங்கின் நினைவாக 16ஆம் நாள் வழிபாடு செய்து அன்னதானம் செய்வதும் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது . விவசாய நிலங்களிலோ அல்லது வனப்பகுதிகளிலோ குரங்குகள் உயிரிழக்கும் பட்சத்தில் அதன் நினைவாக அங்கே ஒரு ஹனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து அங்கு இறை வழிபாடு செய்யும் வழக்கமும் இன்னமும் பரவலாக இருக்கிறது. பெரும் விளைநிலங்களுக்கு இடையில் அல்லது நெடுஞ்சாலைகளில் சாலை ஓரத்தில் சிறிய அளவில் ஆங்காங்கே அனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி இதுவே.

இறுதிச்சடங்கு ஈம சடங்கு என்பதெல்லாம் ஒரு இறை வழிபாடு போல சிரத்தையோடும் ஆத்மார்த்தமான உணர்வோடும் செய்யப்படுவதே இந்த மண்ணின் பாரம்பரிய மரபு .அந்த அடிப்படையில் தான் உயிர்கள் யாவும் ஒன்று ஜனனமும் மரணமும் மனிதனைப் போலவே உயிர்கள் யாவிற்கும் பொதுவானது . அதற்கு உரிய மரியாதையை வழங்கி பாதுகாக்க வேண்டியது மனிதர்களின் கடமை என்ற உயர்ந்த எண்ணங்களை சனாதன தர்மம் மனிதர்களுக்கு போதித்தது . ஆனால் இதையெல்லாம் பழமை வாதம் பிற்போக்கு வாதம் என்று பேசியதன் விளைவு தான் இன்று இறந்த குடும்ப உறவுகளை அடக்கம் செய்யவும் வசதி இல்லாமல் குப்பையில் வீசி சென்ற செய்திகளும் இறந்த உடல்களை அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாமல் தோள்களில் சுமந்து சென்ற செய்திகளும் சமூகத்தின் அவலமாக பார்க்க நேரிடுகிறது.

மனிதர் அல்லாத பறவைகள் விலங்குகள் என்று அத்தனை உயிர்களையும் நேசிக்கவும் அவள் மரணித்த பிறகு கூட உரிய வகையில் அடக்கம் செய்து கௌரவப்படுத்தவுமே சனாதன தர்மம் வழிகாட்டுகிறது. ஆனால் அதை புறந்தள்ளி நவீனம் என்ற பெயரில் முற்போக்கு வாதம் பேசியதன் விளைவு தான் இன்று பறவைகளும் விலங்குகளும் உணவும் நீரும் இன்றி பரிதவிப்பதும் அவை எண்ணிக்கையில் அருகி வரும் இன அழிப்பும் நடக்க காரணம். இதை எல்லாம் பார்த்த பிறகும் இன்னுமும் கூட காக்கைக்கு சோறிடுவதும் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் குரங்குகள் நாய்கள் உள்ளிட்டவற்றிற்கு உணவு பழம் வழங்கி வணங்குவதை மூடநம்பிக்கை என்று பேசுபவர்கள் சனாதன தர்மத்தை மட்டும் அல்ல மனித தர்மம் என்பதன் அர்த்தம் கூட அறியாத மூடர்களாக மட்டுமே இருக்க முடியும். அவர்கள் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு தரும் விஷமிகளே.

இப்படிப்பட்ட விஷமிகளுக்கு இடையில் அவர்களின் விஷம கருத்துக்களை உயர்த்தி பிடிக்கும் சனாதன விரோதிகளுக்கு நடுவில் வாழ்ந்த போதும் உன்னதமான சனாதன தர்மத்தின் வழியில் தங்களது அரும் உழைப்பில் வந்த பணத்திலிருந்து சிறு பங்களிப்பை வழங்கி உயிரிழந்த ஒரு கழுகை கவுரவமாக அடக்கம் செய்து தங்களின் நம்பிக்கையையும் சனாதன தர்மத்தின் மீதான பற்றுதலையும் மெய்ப்பித்த சிறுமுகை திம்மராயன் பாளையம் கிராம மக்கள் உண்மையில் போற்றுதலுக்கு உரியவர்கள்.


Share it if you like it