கேரளாவில் திருவனந்தபுரம் அருகே ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத்தலத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர் மனோஜ் . நல்ல கல்வி அறிவு தொழில்நுட்பம் யதார்த்த உலகைப் பற்றிய புரிதல் என்ற பக்குவப்பட்ட மனிதர். ஆன்மீகத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர். சமீப காலமாக ஆன்மிகம் என்பது கிறிஸ்தவத்தை கடந்து எல்லா மதங்களிலும் இருப்பதையும் அதன் தாக்கத்தையும் உணர்ந்து உள்வாங்க வேண்டும் என்ற ஆன்மீகத் தேடல் அதிகரித்து வந்ததாக குறிப்பிடுகிறார். பாதிரியார் மனோஜ் இந்த தாக்கத்தின் காரணமாக கேரள மாநிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற சனாதன வழிபாட்டுத் தலமாக விளங்கும் சபரிமலை சாஸ்தாவின் ஆன்மீகத்தை உணர வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க சபரிமலைக்கு போக திட்டமிட்டு இருக்கிறார்.
தனக்கு சபரிமலை யாத்திரைக்கு உதவ தயாராக இருந்த ஐந்து சகாக்களுடன் இணைந்து முறையாக காவி அணிந்து சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்தவர் . சபரிமலை யாத்திரைக்கான ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் முறையாக பின்பற்றினார் . முதல் முறையாக கன்னி சாமியாக பயணிக்கும் சாமிகளின் தலையாய சடங்கான தென்னங்கன்று நட்டு வைக்கும் நிகழ்வு வரை ஒன்று விடாமல் முழுவதுமாக பின்பற்றி இருக்கிறார். இறுதியில் இருமுடி அணிந்து தனது சகாக்களுடன் பம்பாவிலிருந்து யாத்திரையாக பயணித்து போய் சபரிமலை ஐயப்பனின் தரிசனம் செய்ததோடு தனது இருமுடி காணிக்கைகளையும் நிறைவேற்றினார் .ஒரு ஆன்மீக தேடலை தேடி வந்தவருக்கு அதன் தார்ப்பரியம் உணர்ந்த மன நிறைவோடு வீடு திரும்பி இருக்கிறார்.
உலகமே தேடி வரும் ஒரு வழிபாட்டு தலம் அதன் உன்னதத்தை குறைக்க வேண்டும் என்று எவ்வளவோ சதிகள் முயற்சிகளைக் கடந்து தன் மாண்பு குறையாமல் மீட்டெடுத்த புண்ணிய தலம் என்ற வகையில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தின் மீது எழுந்த ஆர்வம் .ஹிந்து சனாதன தர்மத்தின் மீது உள்ள பற்றுதல் மரியாதை காரணமாகவே சபரிமலைக்கு பயணித்தவர் . தனது விரத காலம் யாத்திரை காலம் அதன் மூலம் கிடைத்த மனப்பக்குவம் இந்த கட்டுப்பாடான வாழ்க்கை முறைகள் கொடுக்கும் ஆன்மீக தத்துவம் என்று அனைத்தையும் முழுமையாக உள்வாங்கி இன்று ஒரு தேர்ந்த ஆன்மீகவாதியாகவே வீடு திரும்பி இருக்கிறார். ஆனால் ஒரு உன்னதமான ஆன்மீக உணர்வை அனுபவித்தவர் இனி அடுத்த கட்டமான ஆன்மீகத் தேடலுக்கு தயாராக வேண்டும் என்று நினைத்தவருக்கு அவர் சார்ந்த திருச்சபையின் மூலம் அதிர்ச்சியாக வந்து சேர்ந்திருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் காலங்களிலேயே அவரது திருச்சபை அது சார்ந்தவர்கள் அவருக்கு இதற்கு எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி சபரிமலை யாத்திரை போய் வந்த பாதிரியாரின் பாதிரியார் அந்தஸ்தை பணி இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த தேவாலயத்தில் திருப்பலி திருமணச் சடங்குகள் என்று முக்கிய நிகழ்வுகள் முன்னெடுக்க அவருக்கு வழங்கி இருந்த முகவர் அந்தஸ்தையும் ரத்து செய்திருக்கிறார்கள்.
ஆனாலும் தான் ஒரு கிறிஸ்தவர். தாய்மதம் எல்லாம் திரும்பவில்லை. கிறிஸ்தவனாகவே வாழ விரும்புகிறேன். அதே நேரத்தில் அனைத்து மதம் சார்ந்த ஆன்மீகத்தின் உன்னதங்களையும் நான் உள்வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். அதைப் பற்றிய தேடலின் ஒரு பகுதி தான் இந்த சபரிமலை ஐயப்பன் யாத்திரை. ஒரு ஆன்மீக தேடலில் உள் நுழையும் போது அதற்குரிய ஆச்சாரம் அனுஷ்டானம் கட்டுப்பாடுகள் வரைமுறைகளோடு இருந்தால் மட்டுமே அதன் தார்ப்பர்யத்தை நாம் உணரவோ உள்வாங்கவும் முடியும். அதன் காரணமாகவே சிரத்தையோடு விரதம் இருந்து இந்து சகோதரர்களோடு யாத்திரை போய் வந்தேன் என்று தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதை ஏற்க அவர் சார்ந்த திருச்சபையோ அல்லது வேறு எந்த ஒரு அமைப்போ தயாராக இல்லை.
தன் நிலைப்பாட்டில் இருந்து மாறாத மனோஜ் இன்னமும் நிறைய ஆன்மீக விஷயங்கள் உலகில் இருக்கிறது. அவற்றையும் முழுமையாக உணர்ந்து உள்வாங்க நான் முயற்சி செய்வேன். இதில் எனக்கு மதம் என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லா மதத்திலும் இருக்கும் ஆன்மீகத்தை நான் உணரவும் உள்வாங்கவுமே முயற்சி செய்கிறேன் என்று தனது இயல்பில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிகழ்வு நடந்து முழுதாக ஒரு வாரம் கடந்து விட்டது. ஆனாலும் பாதிரியாரின் செயல்பாடுகள் பற்றியோ அவரது சபரிமலை யாத்திரை முன் வைத்து அவருக்கு திருச்சபை மூலம் செய்யப்பட்ட பணியிடை நீக்கம் உரிமம் ரத்து உள்ளிட்ட விஷயங்கள் பற்றியோ இங்கு யாரும் பேசுவார் இல்லை.
பாதிரியார் மனோஜ் இந்த நிமிடம் வரை தான் ஒரு கிறிஸ்தவராகவே உணருகிறார். ஒரு கிறிஸ்தவராகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை அவர் இந்நிலையிலும் மறக்கவில்லை. மறைக்கவும் இல்லை. அந்த கிறிஸ்தவன் என்ற அடையாளத்தோடு தான் அவர் சபரிமலை சாஸ்தாவின் ஆன்மீக தேடலை முன்னெடுத்தார். அவர் எங்கேயும் தான் ஒரு கிறிஸ்தவன் பாதிரியாராக பணிபுரிகிறேன் என்ற உண்மையை மறைக்கவில்லை. அவர் ஒரு கிறிஸ்தவர் என்று தெரிந்து பாதிரியார் என்று தெரிந்தும் அவர் இந்து ஆன்மீகத்தை தேடி வருவதை உணர்ந்து சக இந்துக்கள் அவரை ஒரு சகோதரனைப் போல வாஞ்சையோடு சபரிமலை யாத்திரைக்கு தங்களோடு அழைத்துப் போய் அவரின் பக்திக்கு மரியாதை செய்து இருக்கிறார்கள். அவர் பிரயாணம் செய்தபோது சபரிமலையிலோ தேவஸ்தானத்திலோ அவர் சார்ந்த மதம் என்ன? குலம் என்ன? கோத்திரம் என்ன? என்ற கேள்விகள் எழுப்பப்படவில்லை. காரணம் காவி அணிந்து இருமுடி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் ஒரு சனாதனியாக அவர் உரிய வகையில் ஆலய தரிசனத்திற்கும் இருமுடி சாற்றிற்கும் அனுமதிக்கப்பட்டார். அந்த வகையில் அவர் தேடிச் சென்ற ஆன்மீகம் அவரை முழுவதுமையாக அரவணைத்து கௌரவித்தது . அந்த மனதிருப்தியோடு இன்று அவர் அடுத்த ஆன்மீக தேடலுக்கு தயாராகிறார்.
ஆனால் தாய் மதம் திரும்பாமல் தான் ஏற்றுக்கொண்ட மதத்திலேயே வாழ வேண்டும் .அதே நேரத்தில் இதர மதங்களின் ஆன்மீகத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற அவரின் அடிப்படை தேடலையும் ஆன்மீகம் பற்றிய புரிதலையும் மதிக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் அவருடைய உரிமத்தையும் திருச்சபை சடங்கு செய்யும் அனுமதியையும் நிறுத்தி வைத்திருக்கிறது அவர் சார்ந்த திருச்சபை. இன்று வரை அந்த திருச்சபையை கண்டித்தோ அல்லது அவர்களின் முடிவை திரும்பப் பெறும்படி எந்த தரப்பிலிருந்தும் ஒரு வேண்டுகோள். கண்டனமோ மத நல்லிணக்கம் பற்றிய எந்த ஒரு விமர்சனமும் இதுவரை இல்லை.
ஆனால் மாற்று மதம் சார்ந்த நபர்களுக்கு கொடி மரத்தை தாண்டி செல்லும் அனுமதி இல்லை என்று பதாகை இருக்கும் இந்து மதத்தின் ஆலயங்களுக்கு மத சகிப்புத்தன்மை பற்றியும் மத நல்லிணக்கம் பற்றியும் பாடம் எடுக்கிறார்கள். நீங்கள் சனாதனிகளாக முழு நம்பிக்கையோடு ஆலய தரிசனம் செய்ய வந்தால் உங்களை யாரும் தடுக்க போவதில்லை . ஆனால் மாற்று மதம் சார்ந்தவர்களாக மாற்று மதம் தழுவியவர்களாக இந்து மதத்தின் கருவறைக்குள் நீங்கள் வரவேண்டிய அவசியமே இல்லை. அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையில் ஆலயத்தில் உங்களை அனுமதிப்பது இந்து சனாதனத்தின் பெருந்தன்மையும் உங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச உரிமையும் தான். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல் நான் மாற்று மதம் சார்ந்தவர் என்பதால் என்னை ஆலய கருவறைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கவில்லை என்று வெளிப்படையாக இந்து ஆலயங்கள் மீது ஒரு பெண்ணால் குற்றம் சாட்ட முடிந்தது . அந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக இந்து மதம் சகிப்புத்தன்மை அற்றது. சனாதனிகளுக்கு மத நல்லிணக்கம் தேவை என்று பக்கம் பக்கமாக பாடம் நடத்தினார்கள்.
ஆனால் இன்று ஒரு கிறிஸ்தவர். தான் எப்போதும் கிறிஸ்தவராகவே வாழ்வதை உணர்வதை ஒப்புக்கொள்கிறார். இனியும் கிறிஸ்தவராக வாழவே விரும்புகிறார். அதே நேரத்தில் பிற மதத்தில் இருக்கும் ஆன்மீகங்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பக்குவப்பட்ட ஆன்மாவாக தன்னை மெருகேற்றிக் கொள்கிறார். ஆனால் இந்த ஆன்மீக தார்ப்பர்யத்தை அவருக்குள் இருக்கும் ஆன்மீக தேடலை மதித்து மரியாதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அதற்கு உரிய கௌரவத்தை வழங்கவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் அவரின் மனதை புண்படுத்தக் கூடாது. அவரின் ஆன்மீகத் தேடலை அவமதிக்கக் கூடாது. குறைந்தபட்ச மனித உரிமை யான வழிபாட்டு உரிமை வாழ்வுரிமைகளை நாம் அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்ற இங்கிதம் இல்லாமல் அவரை திருச்சபையில் இருந்து வெளியேற்றி அவமதித்து இருக்கிறது ஒரு வழிபாட்டு தலம். அவர்களின் நடவடிக்கை பற்றியோ அவர்களுக்கும் மேல் இருக்கும் வழிகாட்டு நபர்களின் அலட்சியும் பாராமுகம் பற்றியோ இன்று வரை இங்கு யாரும் வாய் திறந்து கேள்வி கேட்பவர்கள் இல்லை. . ஆனால் இந்து ஆலயங்களுக்கும் சனாதன தர்மத்திற்கும் சகோதரத்துவம் நல்லெண்ணம் அன்பு சகிப்புத்தன்மை மத நல்லிணக்கம் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிவுரைகளை வாரி வழங்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.
பிறப்பால் இந்த மண்ணின் மைந்தர் இடையில் அந்நியமதமான கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டவர். தாய் தந்தை வழியில் கிறிஸ்தவராக வாழ்ந்து வருபவர். ஆனாலும் ஆன்மீக தேடலின் காரணமாக அவர் சபரிமலை ஐயப்பன் சந்நிதியை நாடி வந்த போது அவரிடத்தில் எந்த பேதமும் பார்க்காமல் சனாதனத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பு நம்பிக்கை மரியாதையை மட்டுமே பார்த்து சனாதனம் அவரை தன் மகனாக முழுமையாக அரவணைத்தது. ஆனால் தாய் மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டவர். இன்றைக்கும் அந்த கிறிஸ்தவனாகவே தன்னை உணர்பவர். இனி எதிர்காலத்திலும் கிறிஸ்தவ மதத்தில் இருந்தே பாதிரியாராக தனது பணியை தொடர தயாராக இருப்பவர் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும் அவரது எந்த ஒரு கருத்தையும் உணர்வையும் பரிசீலிக்காமல் அவரது உரிமத்தை ரத்து செய்து திருச்சபையை விட்டு விலக்கி வைக்கிறது ஒரு அந்நிய மத வழிபாட்டு தலம். இத்தனைக்கும் அது நேற்று வரையில் அவர் சார்ந்திருந்த திருச்சபை. அங்கு அவரின் பங்களிப்பும் ஊழியமும் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனாலும் இன்று அந்த இடத்தில் அவருக்காக பரிந்து பேசவோ அவரின் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவோ யாருக்கும் மனமில்லை.
சாதி மதம் குலம் கோத்திரம் அடையாளம் பார்க்காமல் தன்னை நாடி வந்த ஒரு மனிதனை மகனாக அவன் ஆன்மீக உணர்வை மதித்து அவனது பூஜை வழிப்பாட்டை முழுமையாக அங்கீகரித்து .அவனுக்கு ஆலய தரிசனமும் இருமுடி சாற்று வைபவமும் கௌரவமாக நிறைவேற்றிக் கொடுத்து அவனது ஆன்மீகத் தேடலை முழுமையாக கௌரவித்து மன நிறைவோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தது சபரிமலை ஐயப்பன் சன்னதியில் இருக்கும் சனாதன ஹிந்து தர்மம்.
நீ இந்த திருச்சபையை சார்ந்தவன் .கிறிஸ்தவ மதம் சார்ந்தவன். நீ எப்படி வேறு ஒரு மத வழிபாட்டை முன்னெடுக்க முடியும்? அந்த வழிபாட்டு சடங்கில் எப்படி உன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம் ? அந்த வகையில் நீ கிறிஸ்தவ மதத்திற்கு அநீதி இழைத்திருக்கிறாய். உனது பாதிரியார் என்ற பொறுப்பில் இருந்தும் நீ இறங்கி விட்டாய். எச்சரிக்கையையும் மீறி இந்து மத சடங்கு சம்பிரதாயங்களோடு கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து நீ அந்த ஆலயத்தின் தரிசனம் பூஜை வழிபாடுகளையும் செய்து வந்ததால் இனி நீ இந்த கிறிஸ்தவ திருச்சபையில் பாதிரியார் என்னும் அந்தஸ்தில் நிலைத்திருக்கவும் முடியாது. கிறிஸ்தவ திருச்சபை சார்ந்த புனிதமான நிகழ்ச்சிகளை இனியும் நீ தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்று உரிமத்தை ரத்து செய்து அவரை கிட்டத்தட்ட சமூக விலக்காக மதம் சார்ந்த புறக்கணிப்பாளராக உணர வைத்திருக்கிறது அவர் சார்ந்த ஒரு அந்நிய மத வழிபாட்டு தலம்.
குருவாயூர் கிருஷ்ணனுக்கு தாலாட்டு முதல் சபரிமலை ஐயப்பனுக்கு சீராட்டு வரை பிறப்பால் கிறிஸ்தவனான கே ஜே யேசுதாஸ் குரலில் தான் இன்றளவும் ஒலிக்கிறது. பிறப்பால் கிறிஸ்தவரானாலும் கேட்பவர்களின் மனமும் உயிரும் உருகும் படியான ஆன்மீகத்தோடு அவர் பாடிய அந்த உருக்கத்தில் தான் இன்றும் குருவாயூர் கிருஷ்ணன் துயில் எழுகிறார். சபரிமலை ஐயப்பன் துயில் கொள்ளப் போகிறான். ஆனால் முழுமையாக ஆன்மீகத்தில் உணர்ந்து தாய் மதத்திற்கே திரும்பிவிட்டார். ஏசுதாசையும் அவரது குடும்பத்தையும் விமர்சித்தவர்கள் யாரும் இன்று பாதிரியார் மனோஜின் மனித உரிமை பற்றியும் தனிமனித சுதந்திரம் பற்றியும் பேசுவதற்கு நேரமில்லை.
சபரிமலை விவகாரத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும். என்று அந்நிய மதம் சார்ந்த பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதை பெண்ணியம் சம நீதி சமூக நீதி என்று பேசிய வாய்கள் எல்லாம் இன்று கிறிஸ்தவ மதத்திலேயே இன்னுமும் நீடிக்கிறேன் இனியும் கிறிஸ்தவனாகவே வாழ விரும்புகிறேன். இது என்னுடைய பன்முக ஆன்மீகத் தேடலில் ஒரு பகுதி அவ்வளவே. என்று தெளிவான விளக்கம் கொடுத்த பாதிரியார் மனோஜின் சமூக நீதி பற்றியோ அவரின் வழிபாட்டு உரிமை பற்றியோ அவருக்கு மறுக்கப்படும் சம நீதி பற்றியோ பேசுவதற்கு தயார் இல்லை.
மனசாட்சி உள்ளவர்கள் பதில் அளிக்கட்டும் . அனைவரையும் அரவணைத்துப் போகும் தர்மம் எது? உள்ளன்போடு நாடிவரும் அனைவருக்கும் நேத்ர தரிசனமும் ஆத்ம தரிசனமும் தந்து அரவணைக்கும் ஆன்மீக தலங்கள் எந்த தர்மம் சார்ந்தவை? மாற்று மதம் சார்ந்தவன் ஆயினும் மத போதகர் ஆயினும் தங்களின் இறைவனை அவர் உரிய பூஜை முறையில் இருந்து வழிபட விரும்பும் ஒருவனுக்கு நண்பனாக சகோதரனாக இருந்து வழிகாட்டிய ஆன்மீகவாதிகள் சார்ந்திருந்த தர்மம் எது? என்று யோசித்துப் பார்க்கட்டும். மத நல்லிணக்கமும் பரஸ்பர புரிதலும் அன்பும் சகோதரத்துவம் எங்கு நிறைந்திருக்கிறது? என்பது புரியும். மத துவேஷமும் மதமாற்றமும் அதன் காரணமான பிரிவினையும் வன்மமும் எங்கு நிறைந்திருக்கிறது? அதற்கு யாரெல்லாம் துணை நிற்கிறார்கள்? என்ற உண்மையும் அவரவர் மனசாட்சியை உலுக்கும். உயிர்கள் அனைத்தையும் அரவணைத்து அனைவரையும் அன்போடு தர்மத்தின் வழி நடத்திப் போகும் சனாதன ஹிந்து தர்மத்தின் உன்னதமும் புரியும்.