வாசகர்களை கவர்வதற்காக தலைப்பில் பித்தலாட்டம் செய்கின்றனர். நான் சாகும்வரை பா.ஜ.க.வில்தான் இருப்பேன் என்று இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கூறியிருக்கிறார். இதன் மூலம் சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் முக்தாருக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர்தான் என்றாலும், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர். இவரது இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. இசைஞானி இளையராஜா, பாரத பிரதமர் மோடியின் தீவிர விசுவாசி. இவர் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கங்கை அமரனும் தீவிர மோடி பற்றாளர்தான். இவர் பா.ஜ.க.வில் இணைந்து வெளிப்படையாகவே கட்சிப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சத்தியம் தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் முக்தார் அகமது, கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்கை அமரனிடம் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் எந்த இடத்தில் தான் கட்சி மாறப் போவதாக கங்கை அமரன் கூறவில்லை. அப்படி இருக்க, தி.மு.க.வில் இணைகிறார் கங்கை அமரன் என்று தலைப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தது சத்தியம் தொலைக்காட்சி. இது பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சத்தியம் தொலைக்காட்சி நெறியாளர் முக்தார் அகமது செய்தி வெளியிட்டிருப்பது கங்கை அமரனுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வீடியோ வெளியிட்டிருக்கிறார் கங்கை அமரன். அந்த வீடியோவில், நான் எந்த இடத்திலும் தி.மு.க.வில் இணையப் போகிறேன் என்று கூறவில்லை. வாசகர்களை ஈர்ப்பதற்காக அப்படியொரு தலைப்பை முக்தாரும், சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் செய்திருக்கிறார்கள். விளையாட்டுத்தனமான பிள்ளைகள் எடுக்கக் கூடிய பேட்டியில் இதுபோன்று தலைப்புகளில் விளையாடி விடுகிறார்கள். நான் முதன் முதலில் அரசியல் கட்சியில் இணைந்தது பா.ஜ.க.வில்தான். சாகும்வரை பா.ஜ.க.வில்தான் இருப்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.