ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: சுதந்திர போராட்ட தியாகியின் பேரன் வழக்கு!

ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: சுதந்திர போராட்ட தியாகியின் பேரன் வழக்கு!

Share it if you like it

ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாவர்க்கர் பேரன் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் வயநாடு எம்.பி.யாக இருப்பவர் ராகுல் காந்தி. இவர், சுதந்திர போராட்ட தியாகி சாவர்க்கரை தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறார். இந்நிலையில், சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர், புனேவில் உள்ள நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் உரையாற்றிய அவர், சாவர்க்கர் பற்றி பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார். அந்தச் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிந்தும், அவர் வேண்டும் என்றே அந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். சாவர்க்கரின் நன்மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

கடந்த சில ஆண்டுகளாகவே, சாவர்க்கர் பற்றி பல முறை அவதூறு கருத்துக்களை ராகுல் தெரிவித்துள்ளார். இது எனது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட பலருக்கு மனவேதனையை அளித்துள்ளது. சாவர்க்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொதுநல கருத்து அல்ல. சமூகத்தில் அவரது புகழை கெடுக்கும் நோக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் கல்வி நிறுவனங்களில் சாவர்க்கர் பற்றி உரையாற்றி வருகிறேன். ஆனால், ராகுல் காந்தி சாவர்க்கர் பற்றி தெரிவித்த கருத்து வைரலாக பரவியதால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் சாவர்க்கர் பற்றி உரையாற்றுவதை நிறுத்தி விட்டேன். இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாவர்க்கர் உட்பட பலர் மீது அவதூறு கருத்துகளை தெரிவிப்பது ராகுல் காந்திக்கு வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் அவதூறு வழக்கு ஒன்றில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் மீது பல நீதிமன்றங்களில் 5 அல்லது 6 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். மேலும், அவரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று சத்யாகி சாவர்க்கர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it