SD சுந்தரம்
(“கப்பலோட்டிய தமிழன்” படத்திற்கு வசனம் எழுதியவர்)
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில், துரைசாமி ஐயா – பூங்கோதை அம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். சிறு வயது முதலே, தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட பற்றால், நிறைய இலக்கியங்களைக் கற்றார்.
“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டதால், 10 மாத காலம், சிறை தண்டனைப் பெற்றார். சிறையில் இருந்த போது, “கவியின் கனவு” என்ற நாடகத்தை இயற்றினார். பாரதியாரைப் போல, சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, நமது நாடு விடுதலை பெற்றது போல எண்ணி, கனவு கண்டு, நிறையப் பாடலை இயற்றினார்.
1944 ஆம் ஆண்டு, “கவியின் கனவு” என்ற நாடகம், நாடக சபாவில் போடப் பட்டது. அதில் பிரபல நடிகர்களான, சிவாஜி கணேசன், எம் என் நம்பியார், எஸ் வி சுப்பையா போன்றோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். அந்த நாடகம், 1,500 முறைக்கு மேலே போடப் பட்டது, என்ற பெருமையை அடைந்தது. நாடகத்தின் மூலமாக, நிறைய தேசப்பற்று எண்ணங்களை மக்களிடையே கொண்டு சேர்த்தார்.
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, “கப்பலோட்டிய தமிழன்” என்ற படத்திற்கு SD சுந்தரம் அவர்கள் வசனம் எழுதினார். அவற்றுடன் 13 படங்களுக்கு, வசனம் எழுதி உள்ளார்.
1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப் படமும், படத்தில் இடம் பெற்ற வசனங்களும், மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்து, சுதந்திர வேட்கையைத் தூண்டியது.
தமிழக அரசின் “கலைமாமணி” விருதை 1964 ஆம் ஆண்டு பெற்றார்.
தமிழக அரசின் “மேல்சபை உறுப்பினராக” (MLC), 1964 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை இருந்தார்.
தமிழக அரசின் “இயல் இசை நாடக மன்ற” செயலாளராக, 1968 ஆம் ஆண்டு முதல் 1976 வரை பதவி வகித்தார்.
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க, தனது சொந்த வீட்டை விற்று, அதில் வரும் பணத்தைக் கொண்டு, திரைப் படத்தை எடுக்க விரும்பினார். எனினும், அந்த ஆசை நிறைவேறாமலே, இறைவனடி சேர்ந்தார்.