பறம்பு மலையை ஆட்சி செய்து வந்த வேள்பாரியை மூவேந்தர்களின் கூட்டணியால் கூட நெருங்க முடியவில்லை. காரணம் அந்த மலையிலேயே பிறந்து அந்த மலையிலேயே வாழும் பறம்பு மக்கள், மலையின் தன்மையை முற்றிலும் தெரிந்தவர்கள். கீழிருக்கும் படையால் பாரியை வெல்வதெல்லாம் சுலபமல்ல.
மூவேந்தர்களால் பாதிக்கப்பட்ட குலங்கள் அனைத்தும் பின் பாரியை நாடி பறம்பில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்களைத் தாண்டி பறம்பை வெல்வதென்பதும் இயலாத ஒன்று. இந்த நிலை தான் தற்போது சீனாவிற்கு. அந்த மலையின் தன்மையை அறிந்தவர்களும், சீனாவால் பாதிக்கப்பட்டு இந்தியாவை தஞ்சம் புகுந்த திபெத் வீரர்களைக் (SFF) கொண்டு லடாக் எல்லையில் மலை உச்சியைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. இனி இவர்களைத் தாண்டி, இந்தியாவிற்குள் நுழைவதென்பது பறம்பை வெல்வது போல தான்.
இதன் பலன் போர் காலத்தில் தான் புரியும். கார்கில் போரில் மேலிருந்த பாகிஸ்தான் வீரர்களை கீழிருந்து நாம் வெல்வதற்கு பல உயிர் தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எதிரியின் பலத்தை உடைக்க சில யுக்திகள் உண்டு. அதில் ஒன்று, எதிரியால் காலம் காலமாக பாதிக்கப்பட்டவர்கள். பல மடங்கு பலமுடன் வரும் போது எதிரியின் பலம் நிச்சயம் குறையும். மனதளவில் மாற்றம் நிகழும். இந்த யுக்தியைத் தான் தற்போது சீனாவுடன் இந்தியா கையாண்டுள்ளது. லடாக் எல்லையில் சீன ராணுவம் ஆக்கிரமித்திருந்த உயரிய இடத்தை தற்போது இந்தியா கைப்பற்றியுள்ளது. அதற்கு இந்தியா பயன்படுத்திய பிரிவு Special Frontier Force.
இந்த பிரிவானது 1962-ல் இந்திய சீனப் போருக்கு பின் தொடங்கப்பட்டது. அதாவது சீனாவை எதிர்க்கவே இது உருவாக்கப்பட்ட பிரிவு. இது இந்திய ராணுவத்தின் கீழ் வராது. நேரடியாக மந்திரி சபையின் கீழ் வரும். RAW-வின் ஒரு அங்கமாக திகழ்வது. பிரதமரின் கண்காணிப்பில் இருக்கும் ஒன்று. இதிலிருக்கும் வீரர்கள் திபெத்திய வீரர்கள். முன்பு தலாய் லாமாவின் காவலர்கள். சீனா திபெத் மீது போர் தொடுத்த போது சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள். பின் அதில் பாதிக்கப்பட்டு இந்தியாவிற்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களை வைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த SFF.
இவர்கள் அந்த பகுதியிலேயே பிறந்து அந்த சுற்றுச்சூழலிலேயே வளர்ந்ததால் பனி மலை சிகரங்களை எளிதில் ஏறிவிடும். ஆற்றல் கொண்டவர்களாக திகழ்பவர்கள். ஆப்ரேஷன் ஈகிள், ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார், சியான்சின் பனிமலையைக் கைப்பற்றியது, கார்கில் போர், என பல சந்தர்ப்பங்களில் இந்திய அரசாங்கம் இந்த பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. இருப்பினும் சில பல காரணத்தினால் இந்திய – சீன எல்லையில் இவர்களை நிறுத்தியதில்லை. இந்த நேரத்தில் SFF-யைப் பயன்படுத்தியதெல்லாம் மிக தரமான யுக்தி. இதில் சீனா ஆடிப்போயுள்ளது என்பதில் ஐயமில்லை. அவர்களின் சிந்தனையில் இந்தியா நீங்கா இடம் பெற்றுவிட்டது. அவர்களின் மனோபலம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இதெல்லாம் GDP’க்காக இந்தியா நடத்தும் நாடகம் என்று வலைத்தளங்களில் மூடத்தனமாக பேசி திரியும் அரைவேக்காடுகளுக்கு புரிய வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.!