தன் நாட்டின் அடையாளம் இல்லாததை நினைத்து வருந்திய சர் சிவி ராமன்

தன் நாட்டின் அடையாளம் இல்லாததை நினைத்து வருந்திய சர் சிவி ராமன்

Share it if you like it

சந்திரசேகர வேங்கட ராமன்,  திருச்சிராப்பள்ளியில் உள்ள திருவானைக் காவலில், நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு, சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மாளுக்கு, இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை, கணிதம் மற்றும் இயற்பியலில் பேராசிரியராக இருந்ததால், அவர் வீட்டில், கல்வி சூழலைக் கொண்டு இருந்தார்.

பன்னிரண்டு வயதில் பள்ளிப் படிப்பை முடித்து, பதினான்கு வயதில், 1902 ஆம் ஆண்டு, சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். 

1904 ஆம் ஆண்டு, பி.ஏ. பட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்று, முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப் பதக்கத்தையும் பெற்றார். 1907 ஆம் ஆண்டு, எம்.ஏ. பட்டம் பெற்றார்.

இந்தியாவில், அந்த காலக் கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு, வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள், இந்திய நிதித் துறையில் சேர்ந்தார்.

அலுவலக நேரம் முடிந்த பிறகு, ராமன், கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில், அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். அதே ஆய்வகத்தில், அவர் “ஒலியியல் மற்றும் ஒளியியல்” ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு, இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக, அங்கு அவர் தங்கி இருந்தார். அங்கு இருந்த காலத்தில், அவரது “ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி”, உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. “லண்டன் ராயல் சொசைட்டி”யால், 1924ல் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது.

1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக, சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்றும் பெயரிடப் பட்டது.

1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட, இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். பின்னர், இயற்பியல் பேராசிரியராக, அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார்.

1947 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில், முதல் தேசிய பேராசிரியராக, நியமிக்கப் பட்டார்.

1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணி புரிந்தார்.

அறிவியல் உலகம், ராமனின் கண்டு பிடிப்பை அங்கீகரித்தது. இத்தாலிய தங்கப் பதக்கம், இங்கிலாந்தின் ‘சர் பட்டம் என்று விருதுகள், அவரைத் தேடி வந்தன. “சி.வி. ராமன்” என்ற பெயர், ஒரே நாளில் உலகறிந்த பெயராயிற்று.

1930-ஆம் ஆண்டு, அறிவியல் பங்களிப்புக்கான ‘நோபல் பரிசு’, ராமனுக்கு வழங்கப் பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர், சி.வி. ராமன் தான். 1939-ல், இந்திய விஞ்ஞானக் கழகத்தின் (பெங்களூர்) இயக்குநராக, அவர் நியமிக்கப் பட்டார்.

அறிவியல் துறைக்காக, தன் சொந்த செலவில், ‘ராமன் ஆராய்ச்சிக் கழகம்’ என்னும் அமைப்பை, தோற்றுவித்தார். 1954-ல், பாரத ரத்னா விருது, 1958-ல் ரஷ்யாவின் ‘சர்வதேச லெனின் சமாதான விருது’ போன்றவை பெற்றார்.  ராமனின் நாட்டுப் பற்று, நகைச்சுவை உணர்வு குறிப்பிடத் தக்கவை.

ராமன் நோபல் பரிசு பெற்ற போது, அவையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாய் உரையொன்று நிகழ்த்தினார்.அதில், ‘இப்பரிசினை எனது நாட்டின் சார்பிலும், தற்போது சிறையில் இருக்கும் என் நண்பர்கள் சார்பிலும் (அப்போது சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது) பெற்றுக் கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டது, அவருடைய அஞ்சாமைக்கும் நாட்டுப் பற்றுக்கும், சிறந்த உதாரணம்.

பரிசு பெற்ற ராமன், ஒரு பாராட்டு விழாவில், கலந்து கொண்டார். விழாவையொட்டி நடந்த விருந்தில், எல்லோருக்கும் கோப்பைகளில் ஒயின் பரிமாறப் பட்டிருந்தது. ராமன், மது அருந்துவாரா மாட்டாரா என்ற சர்ச்சை நடந்து கொண்டிருந்தது, விருந்தினர்களுக்குள். அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி ராமன் எழுந்தார். மதுக் கோப்பையைக் கையில் உயர்த்திய படி, சுற்றி வரப் பார்த்தார்; நண்பர்களே “ஆல்கஹால்” மீது ராமன் எஃபக்ட் என்ன என்பது, உங்களுக்குத் தெரியும். ஆனால், ‘ராமன் மீது ஆல்கஹாலுக்கு எந்த எஃபக்டும் இருக்க முடியாது’ என்று கூறி, கோப்பையை அப்படியே கீழே வைத்து விட்டார். வெறுமனே சிரிக்க வைக்கவில்லை அவருடைய பேச்சு, சிந்திக்க வைப்பதாயிருந்தது. 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி, “தேசிய அறிவியல் தினம்” கொண்டாடப் படுகிறது. இயற்பியலுக்காக, நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியரான சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில், இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வழக்கமாக சாதனை புரிந்தவர்களின் பிறந்த நாளில் தான், அவர் சாதித்த துறை குறித்து விழா கொண்டாடப் படும். ஆனால், சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற காரணமாக இருந்த, ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாளான, பிப்ரவரி 28-ம் தேதியை, நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடி வருகிறோம்.

சர்.சி.வி. ராமன் மரணம் :

இந்திய அறிவியல் பாரம்பரியத்தை தொடங்கி வைத்த ராமன், தமது 82-ஆம் வயதில், 1970-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள், பெங்களூரில் காலமானார். இயற்பியல் துறையில், தம்முடைய உழைப்புக்குச் சான்றாய், 475 ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர் விட்டுச் சென்றார்.

கணேசன்


Share it if you like it