ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ‘வினோத’ திருவிழா, கறிவிருந்து!

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ‘வினோத’ திருவிழா, கறிவிருந்து!

Share it if you like it

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத கறிவிருந்து நிகழ்ச்சி நடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே இருக்கிறது காவனூர் கிராமம். இக்கிராமத்தில் காளி கோயில் இருக்கிறது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் இக்காளி கோயில் திருவிழா நடைபெறுவது வாடிக்கை. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக கருப்ப சாமிக்கு கிடா வெட்டி காவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு விருந்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது, இப்படி கிடா வெட்டி விருந்து வைத்தால், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். ஆகவே, திருவிழாவின் ஸ்பெஷலே இந்த கறிவிருந்துதான். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். தப்பித் தவறிக்கூட பெண்களோ, சிறுவர் சிறுமிகளோ கலந்து கொள்வதில்லை என்பதுதான்.

அந்த வகையில், காளி கோயில் திருவிழா நேற்று நடந்த நிலையில், இரவு கருப்ப சாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 100 கிடாக்களுக்கும் மேல் வெட்டி பலி கொடுத்து, கருப்பருக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றி, வழிபாடு நடத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தொடர்ந்து, பிரம்மாண்டமான பாத்திரங்களில் சாப்பாடும், கறியும் சமைக்கப்பட்டது. இரவு கறி விருந்து நடந்தது. இதில், காவனூர், சாலை கிராமம் மற்றும் காவனூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இப்படி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த வினோத திருவிழாதான் தற்போது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இதேபோல, ஏராளமான கிராமங்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. விசித்திரம்தான்!


Share it if you like it