12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரபு ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இஸ்லாமிய சிறுவர்களுக்கு அரபி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் அரபி மொழி கற்று வருகின்றனர். இப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ரோடு வீரசிங்கமடத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது அரபி மொழி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் அரபி மொழி கற்கச் சென்றிருக்கிறான். அந்த சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றிருக்கிறார் ஆசிரியர் சாகுல் ஹமீது.
இதற்கு அச்சிறுவன் உடன்படாத நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி அச்சிறுவன் மீது ‛சைத்தானை’ ஏவிவிடுவேன் என்று சாகுல் ஹமீது மிரட்டி இருக்கிறார். இதனால், பயந்து போன சிறுவனை, தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார். வகுப்பு முடிந்து வீட்டிற்குச் சென்ற அச்சிறுவன், நடந்த விஷயங்களை பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதிருக்கிறான். இதையடுத்து, அச்சிறுவன் தனது பெற்றோருடன் சென்று சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் சாகுல் ஹமீதை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு நீதிபதி சரத்ராஜ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், ஆசிரியர் சாகுல் ஹமீது, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சாகுல் ஹமீதுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசுத் தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். இத்தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.