சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தண்ணீரில் கரையும் செங்கலையும், தரமற்ற சிமென்ட் மற்றும் மணலையும் வைத்து பள்ளிக் கட்டடம் கட்டுவதாக பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஆலங்குளத்தில் கல்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஆங்கில வழிக் கல்வியும் கற்பிக்கப்படுவதால், மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. இதனால் இட நெருக்கடி ஒருபுறம் நிலவுகிறது. இன்னொருபுறம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முறையான கழிப்பிட வசதியும் இல்லை. எனவே, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்களும், கழிப்பறையும் கட்டித்தர வேண்டும் என்று மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, மானாமதுரை எம்.எல்.ஏ. தி.மு.க.வைச் சேர்ந்த தமிழரசி ரவிக்குமார், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இப்பணிகள் கான்ட்ராக்ட் விடப்பட்டு, தற்போது புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கட்டடப் பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அதாவது, இக்கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் செங்கல், தண்ணீரை ஊற்றினால் கரைகிறது.
அதேபோல, கையால் உடைத்தால் செங்கல் உடைந்து தூள் தூளாகிறது. மேலும், கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் சிமென்ட், எம் சாண்ட் மணல் உள்ளிட்டவையும் தரமற்றவையாக இருக்கின்றன. இதுபோன்ற பொருட்களால் கட்டடம் கட்டப்படுமானால், அது எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று கொந்தளிக்கிறார்கள். ஆகவே, தரமற்ற பொருட்களால் கட்டப்படும் இக்கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக தரமான பொருட்களை வைத்து கட்டடம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.