பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மோடியை சந்தித்த பிறகு ஆர்த்தோடக்ஸ் சர்ச் தலைவர் பேட்டி!

பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்: மோடியை சந்தித்த பிறகு ஆர்த்தோடக்ஸ் சர்ச் தலைவர் பேட்டி!

Share it if you like it

பா.ஜ.க. ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஆகவே, மத்தியில் பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆர்த்தோடக்ஸ் சர்ச் தலைவர் மேத்யூஸ் கூறியிருக்கிறார்.

டெல்லியில் நடந்த ஈஸ்டர் விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த, கேரள சிரியன் சர்ச் தலைவர் 3-ம் பசிலியோ மார்த்தோமா மேத்யூஸ், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சர்ச் குழுவினருடன் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு, கேரளா திரும்பிய அவர், தேவலோகம் பகுதியிலுள்ள சர்ச்சின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி அரசால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. நாங்கள் இயல்பாகவே உணர்கிறோம். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நாங்கள் எந்த கசப்பான அனுபவங்களையும் இதுவரை சந்தித்தது இல்லை. உண்மையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தது சுமூகமானதாக, இயல்பானதாகவே இருந்தது.

நாட்டில் உள்ள ஏழைகளுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், ஆஷா பணியாளர்கள் திட்டம் உள்ளிட்டவற்றை கூறலாம். ஆகவே, பா.ஜ.க. அரசின் அப்பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜக.வில் சேர்ந்தது அவரது சுதந்திரம். காங்கிரஸ் கட்சியில் அவரால் ஏன் இருக்க முடியவில்லை? என்பதை அக்கட்சியினர் சிந்திக்க வேண்டும். எதிர்வரும் பார்லிமென்ட் தேர்தலிலும் பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில், வலிமையான எதிர்க்கட்சியே இல்லை. தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைவதற்கான சாத்தியக் கூறுகளும் இல்லை. ஆர்த்தோடக்ஸ் சர்ச்சை பொறுத்தவரை, எந்த அரசியல் நிலையும் இதுவரை எடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆக, கிறிஸ்தவர்கள் மத்தியிலும் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


Share it if you like it