ஆட்டுக்கால் சூப் சாப்பிடலியோ சூப்..!

ஆட்டுக்கால் சூப் சாப்பிடலியோ சூப்..!

Share it if you like it

இந்த செய்தியைப் படித்தால் சூப் பிரியர்கள் இனி சூப் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவார்கள். அந்தளவுக்கு அருவெறுப்பான வீடியோ அது.

பொதுவாக, சூப் குடிக்கும் அனைவருக்குமே அதில் ஒரு எலும்புத் துண்டாவது இருக்காதா என்ற ஏக்கத்துடனேயே குடிப்பது வழக்கம். இதில் சிலருக்கு எலும்புத் துண்டுகள் வரும், சிலருக்கு வராது. இதில் எலும்புத் துண்டு வந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வராதவர்கள் துரதிருஷ்டசாலிகள் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், உண்மையில் எலும்புத் துண்டு கிடைக்கப் பெற்றவர்கள் துரதிருஷ்டசாலிகள் என்று நீரூபிக்கிறது இந்த சம்பவம்.

ஆம்! சென்னை காரப்பாக்கம் அரவிந்த் தியேட்டர் அருகே இருக்கிறது அந்த சூப் கடை. சுமார் 55 முதல் 60 வயதுவரை மதிக்கத்தக்க ஒருவர் இந்த சூப் கடையை நடத்தி வருகிறார். மாலை நேரத்தில் தியேட்டருக்கு வருபவர்களும், அப்பகுதி மக்களும், ஆண், பெண் பாகுபாடின்றி இவரிடம் சூப் வாங்கிக் குடித்து விட்டு, சூப் நல்ல சுவையாக இருப்பதாகக் கூறிச் செல்வது வழக்கம். ஆனால், இந்த சுவைக்கான காரணம் இப்போதுதான் தெரியவந்திருக்கிறது.

அதாவது, சூப் கடைக்காரரை பொறுத்தவரை பெயரளவில் சில ஆட்டு எலும்புகளை வாங்கி சூப் வைத்து வந்திருக்கிறார். ஆனால், சூப் குடிக்க வருபவர்கள் பலரும் எலும்புத்துண்டு போடும்படி கேட்டிருக்கிறார்கள். பாவம், வைத்துக் கொண்டா அவர் வஞ்சம் செய்யப் போகிறார். இருந்தால்தானே போடுவதற்கு. எனவே, பார்த்தார் அந்தக் கடைக்காரர். கஸ்டமர்கள் சூப் குடித்துவிட்டு கீழே போடும் எலும்புத் துண்டுகளை, அவர்கள் சென்ற பிறகு, அக்கம்பக்கம் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு, நைசாக அந்த எலும்புத் துண்டுகளை பொறுக்கி மீண்டும் சூப்பில் போட்டு அடுத்துவரும் கஸ்டமர்களுக்கு கொடுத்து வந்திருக்கிறார்.

இதை அறியாத பலரும், சூப்பில் எலும்பு போடும்படி கேட்டு வாங்கி உறிஞ்சிப் பார்த்துவிட்டு ஒன்றுமே இல்லையே என ஏமாற்றத்துடன் தூக்கிப் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், சூப் கடைக்காரர் செய்யும் தில்லாலங்கடி வேலையை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி பலரது வயிற்றையும் கலக்கி வருகிறது. அந்தக் கடைக்காரரிடம் சூப் குடித்த பலரும், வாந்தி எடுக்காத குறையாக குமுட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

இது ஒருபுறம் இருக்க, இதையெல்லாம் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லையா என்கிற விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, அந்த சூப் கடைக்காரரை தேடி வருகிறார்களாம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.


Share it if you like it