பூலோகத்தில் இந்திரன் வழிபட்ட தலங்கள் ஏராளம் உண்டு. அதில் ஐந்து இடங்களில் மாதவரை இந்திரன் பிரதிஷ்டை செய்து தவம் செய்து பூஜை செய்து இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் .உத்திரப்பிரதேசம் காசியில் வேணி மாதவர் – ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் குந்தி மாதவர் – ஆம்பூரில் பிந்து மாதவர் -ராமேஸ்வரத்தில் சேது மாதவர் – கேரளாவில் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவர் வரிசையில் துத்திப்பட்டு பிந்து மாதவர் ஆன்மீக திருத்தமும் ஒன்று.. வாழ்நாளில் ஒரு முறை தரிசனம் செய்தாலே செய்தவர்களுக்கு சொர்க்கமும் மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும்என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தில் விநாயகர் – முருகர் – ஹயக்ரீவர் – நரசிம்மர் – விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களும் தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள். இந்த ஆலயத்தில் சுயமாக எழுந்த வேம்பு மரமும் அதன்அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் நாகர் தெரு மேனிகளும் அபூர்வ ஆன்மீக அதிர்வுகள் கொண்டது. பொதுவாக நதிக்கரைகளில் இருக்கும் இந்த நாகர் திருமேனிகள் சக்தி வாய்ந்த பரிகார தலங்களாக விளங்குபவை. அதிலும் விஷ்ணு ஆலயமாக இருந்த போதிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இது போன்ற பழமையான ஆலயங்களில் இருக்கும் நாகர் திருமேனிகள் அபூர்வ சக்தி படைத்தவை.
தமிழ் வருடப்பிறப்பு – அக்ஷய திருதியை – சித்திரைப் பௌர்ணமி – வைகாசி விசாகம் – ஆடி மாத பிறப்பு – ஆண்டாளின் ஆடிப்பூரம் – கிருஷ்ண ஜெயந்தி – புரட்டாசி மாத 5 சனிக்கிழமை உற்சவங்கள் – நவராத்திரி – தீபாவளி – வைகுண்ட ஏகாதசி – தை மாத பிறப்பு – ஆடி அமாவாசை – மஹாளய அமாவாசை – தை அமாவாசை உள்ளிட்ட பித்ரு தர்ப்பணம் தினங்கள், மாசி மகம் – பங்குனி உத்திரம் என்று ஆண்டு முழுவதும் திருவிழா உற்சவம் களைக்கட்டும் ஒரு புண்ணிய பிந்து மாதவ பெருமாள் கோவில். அமாவாசை – பௌர்ணமி – சனிக்கிழமை – ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. இதை தவிர உபயதாரர்கள் விருப்பத்தின் பேரில் சிறப்பு விசேஷ பூஜைகள் அலங்காரங்களும் உண்டு.
இங்குள்ள ஆன்மீக அடியார்கள் ஒன்றிணைந்து புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அலங்காரத்தில் திருமலை திருப்பதியில் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் ஏழுமலையான் தரிசனம் போலவே இங்கும் விசேஷ அலங்காரம் செய்து பக்தர்களுக்கு ஆன்மீக சேவை செய்து வருகிறார்கள். இந்தப் புரட்டாசி சனிக்கிழமை உற்சவமும் வைகுண்ட ஏகாதசி உற்சவமும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கு பெரும் திவ்ய தரிசனத்தை வழங்குகிறது.
புராணத் தொடர்புடைய பழமையும் பெருமையும் வாய்ந்த புண்ணிய ஷேத்திரம் என்பதால் இந்த ஆலயத்தில் அதிக அளவில் திருமணம் நடக்கிறது மேலும் சுவாமிக்கு திருமஞ்சனம் திருமண உற்சவம் நடத்துவதும் இங்கு சிறப்பு வேண்டுதலாகவும் நேர்த்திக் கடனாகவும் விளங்குகிறது. பெருமாளுக்கு உகந்த துளசி மாலை – தாமரைப் பூக்கள் பாரிஜாதம் என்னும் பவளம் மலர் கொண்டு அர்ச்சிப்பதும் துளசி தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்களும் வழக்கத்தில் உண்டு.விசேஷ பூஜை உற்சவ நாட்களில் உபய தாரர்கள் மற்றும் ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் ஆன்மீக சேவா மையங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அடியார்களுக்கு அன்னதான சேவையும் உண்டு.
காலை 7-12 மணி மாலை 5-7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்கு உட்பட்டது.
தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில் ஆம்பூர் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் கரையில் துத்திப்பட்டு கிராமத்தில் இந்த பிந்து மாதவ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆம்பூர் ரயில் நிலையம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் ஷேர் ஆட்டோ வசதிகள் உண்டு. காட்டாம்பூர் கூட்டுச்சாலை பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பேருந்து ஆட்டோ மூலம் ஆலயத்தை அடையலாம். மாநில நெடுஞ்சாலையில் சாலையின் அருகிலேயே இருக்கும் ஆலயம் என்பதால் எளிதில் அடைய முடியும்.
ஓம் நமோ நாராயணா
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா