பெண்ணை தாக்கிய மதபோதகர்… செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீதும் தாக்குதல்: 6 பேர் கைது!

பெண்ணை தாக்கிய மதபோதகர்… செய்தி வெளியிட்ட பத்திரிகை அலுவலகம் மீதும் தாக்குதல்: 6 பேர் கைது!

Share it if you like it

இலங்கை யாழ்பாணத்தில் பெண் உள்ளிட்ட மூவர் மீது மதபோதகர் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த மதபோதகர், தனது படை பரிவாரங்களுடன் சென்று, அப்பத்திரிகை அலுவலகம், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதையடுத்து, மதபோதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை யாழ்பாணம் பகுதியான அச்சுவேலியில் ‘அசெம்ளி ஆஃப் ஜீவ வார்த்தை’ என்கிற கிறிஸ்தவ ஜெபகூடம் அமைந்திருக்கிறது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது, ஸ்பீக்கர்களை வெளியே வைத்து அதிக ஒலி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு, அந்த ஜெபக்கூடத்துக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த அச்சபையின் மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் அவ்வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களின் கழுத்தை நெரித்துத் தாக்கி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் மதபோதகர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்தனர்.

இது தொடர்பாக யாழ்பாணத்திலுள்ள தனியார் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது மதபோதகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, கடந்த 9-ம் தேதி சுமார் 30 பேர் கொண்ட தனது படை பரிவாரங்களுடன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்திருக்கிறார். பின்னர், அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள், ஊழியர்களை மிரட்டி இருக்கிறார்கள். மேலும், அலுவலக வாயிலை மறைத்து, யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் மதபோதகர் கும்பல் ஆசிரியர் உள்ளிட்ட பணியாளர்களை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மதபோதகர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.


Share it if you like it