இலங்கைக்கு ‘டோர்னியர்’: சீனாவுக்கு இந்தியா செக்!

இலங்கைக்கு ‘டோர்னியர்’: சீனாவுக்கு இந்தியா செக்!

Share it if you like it

சீனாவின் உளவுக் கப்பல் இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்திற்கு இன்று வந்திருக்கும் நிலையில், இலங்கை கடற்படையிடம் நேற்றே ‘டோர்னியர்’ கண்காணிப்பு விமானத்தை இந்தியா ஒப்படைத்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு செக் வைத்திருக்கிறது இந்தியா.

இலங்கையிலுள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு விட்டிருக்கிறது இலங்கை அரசு. இந்த சூழலில், சீனாவின் உளவுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால், இந்த உளவுக்கப்பல் இந்தியாவை உளவு பார்க்கும் என்பதால், தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்து, சீன உளவுக்கப்பலுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இக்கப்பலின் வருகைக்கு முதலில் அனுமதி மறுத்த இலங்கை அரசு, தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.

இதையடுத்து, சீனாவின் உளவுக்கப்பல் இன்று ஹம்பந்தோடா துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. இங்கு ஒரு வாரம் நிலை நிறுத்தப்படும் இக்கப்பல், ஆகஸ்ட் 22-ம் தேதிதான் புறப்படும் என்று தெரிகிறது. இக்கப்பல் நீர் வழித் தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கும் வசதியை கொண்டது என்று கூறப்படுகிறது. அதோடு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக மட்டுமே இக்கப்பல் பயன்படுத்தப்படும் என்று சீனத் தரப்பில் கூறப்பட்டாலும், உளவு பார்ப்பதற்காகவே இக்கப்பல் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், இலங்கைக்கு டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை இந்தியா நேற்று வழங்கி இருக்கிறது. அதாவது, இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையேயான ராணுவ நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்குத் தேவையான ராணுவ உபகரணங்கள், பயிற்சிகளை இந்தியா அளித்து வருகிறது. அந்த வகையில், கடற்பகுதிகளை கண்காணிக்க ‘டோர்னியர் 228’ என்ற கண்காணிப்பு விமானத்தை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதி அளித்திருந்தது. அதன்படி, இந்த கண்காணிப்பு விமானம் இலங்கை கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இதில், இந்தியாவின் ராஜதந்திரம் அடங்கி இருக்கிறது என்பதுதான் ஹைலைட். அதாவது, சீனாவின் உளவுக்கப்பல் இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளை உளவு பார்க்கும். அதேசமயம், இந்த கப்பலை டோர்னியர் விமானம் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், சீன உளவுக்கப்பல் எங்கு செல்கிறது, எந்த பகுதிகளில் உளவு பார்க்கிறது என்பது இலங்கை அரசுக்குத் தெரியவரும். இது பின்னர் இந்தியாவிடம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் இந்தியா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள்.


Share it if you like it