அமைச்சருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு ஆடியோ!

அமைச்சருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு ஆடியோ!

Share it if you like it

தன்னைவிட பணக்காரங்க யாரும் இருக்கக் கூடாது என்று நினைக்கும் அமைச்சர் நேரு, என்னை அழிக்கப் பார்க்கிறார் என்று ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டி கூறிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைகரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பழனியாண்டி. அமைச்சரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர். நேருவின் பரிந்துரையின் பேரில்தான் இவருக்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் சீட் கிடைத்தது. அதேபோல, அவரது ஆதரவால்தான் வெற்றியும் கிடைத்தது. இதனால், எம்.பி. திருச்சி சிவாவுக்கும், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டபோது, நேருவுக்கு ஆதரவாக நின்றவர் பழனியாண்டி. ஆனால், தற்போது நேருவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, எம்.எல்.ஏ. பழனியாண்டி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் சொந்தமாக குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரிக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சமீபத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் பழனியாண்டி, தனக்கு அபாராதம் விதிக்கப்பட்டதின் பின்னணியில் அமைச்சர் கே.என்.நேரு இருப்பதாக சந்தேகிக்கிறார். மேலும், நேருவின் அறிவுறுத்தலின் பேரில்தான் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பான ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் எம்.எல்.ஏ. பழனியாண்டி, “2 ஏக்கர் நிலத்தில் 250 கோடி ரூபாய்க்கு கல் எடுத்திருந்தால்தான், எனக்கு 23 கோடி ரூபாய் அபராதம் விதிக்க முடியும். எனவே, எனக்கு போடப்பட்ட அபராதம் தவறு என்று வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். அபராதம் விதித்ததற்கு அமைச்சர் நேருதான் காரணம். வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ.விடம் சொல்லி அதிக அபராதம் விதித்திருக்கிறார்கள். ஆகவே, ‘எம்.எல்.ஏ. பழனியாண்டியை அழிக்கும் நேரு’ என்று எழுதுங்கள்.

என்னிடம் கேட்டால் ‘ஆமாம்’ என்று சொல்கிறேன். கடந்த தி.மு.க. ஆட்சியில் என்னை கொலை கேஸில் சிக்க வைத்த நேரு, இந்த ஆட்சியில் என்னை குவாரி கேஸில் சிக்க வைக்கிறார் என்று எழுதுங்கள். யார் கேட்டாலும் இது சரிதான். ஆமாம் என் கட்சிக்காரங்கதான் பண்றாங்கன்னு நான் சொல்றேன். நேரு தன்னைத் தவிர வேறு யாரும் பணக்காரங்களாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எனது குவாரியில் யாரும் நுழைய மாட்டார்கள். ஆனால், ஆளும்கட்சியாக இருக்கும்போது நேருவின் துாண்டுதலால் இப்படி எல்லாம் நடக்குது” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்திருக்கும் ஆடியோவில், ‘நாங்க சொந்த கட்சிக்காரங்களுக்கு எந்த தப்பும் செய்ய மாட்டோம். எம்.எல்.ஏ.,வாக இருக்குறவருக்கு என்னால் எந்த தப்பும் வராது. எம்.எல்.ஏ. சொல்வது உண்மை என்று நிரூபித்தால், அவர் என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குறேன்’ என்று கூறியிருக்கிறார். இதனிடையே, இந்த விவகாரம் திருச்சி மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. பழனியாண்டி எம்.எல்.ஏ., அமைச்சர் நேருவுடன் மிகவும் இணக்கமாக செல்லக்கூடியவராச்சே. அப்படி இருக்க, அவர்களுக்குள் என்ன புது பிரச்னை என்று விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Share it if you like it