கிராமங்களை தத்தெடுக்க முன்வாருங்கள் – ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்!

கிராமங்களை தத்தெடுக்க முன்வாருங்கள் – ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்!

Share it if you like it

தமிழகத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

‘ராக்’ அமைப்பு மற்றும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் மறைந்த தொழிலதிபர் சிஆர். சுவாமிநாதன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி, மணி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நானி கலையரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசினார் ;

கோவை தொழில் நிறுவனங்கள் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் தொழில்துறையில் முன்னோடியாக செயல்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பின் தங்கிய மாவட்டங்களிலும் தொழில்களை தொடங்க தொழில்முனைவோர் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களில் 90 சதவீதம் பேர் சொந்த வீடு இல்லாத நிலையில் உள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த கோவை தொழில் முனைவோர் கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும். இன்று உதாரணமாக தொழில் நிறுவனங்களை ரூ.300 கோடி முதலீட்டில் தொடங்குவதை காட்டிலும் ரூ.3 அல்லது ரூ.5 கோடி செலவிட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செயல்பட்டால் பல மடங்கு லாபத்தை பெற முடியும்.

கோவையில் மறைந்த தொழில திபர் சிஆர். சுவாமி நாதனுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டோம். எதிர்பாராத விதமாக அவர் இறந்து விட்டார். உலகில் நான் எங்கு சென்று பேசினாலும் இந்தியாவுக்கு வாருங்கள் என்றும் குறிப்பாக கோவைக்கு வருகை தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறேன்.

இதற்கு இப்பகுதியில் உள்ள ஆக்கபூர்வமான தொழில்முனை வோரின் செயல்பாடுகளே காரணமாகும். இவ்வாறு அவர் பேசினார். 


Share it if you like it