SS விஸ்வநாத தாஸ் நாடகங்கள் மூலம் சுதந்திர எழுச்சியை மக்களிடையே எழுப்பியவர்

SS விஸ்வநாத தாஸ் நாடகங்கள் மூலம் சுதந்திர எழுச்சியை மக்களிடையே எழுப்பியவர்

Share it if you like it

SS விஸ்வநாத தாஸ்

(நாடகங்கள் மூலம் சுதந்திர எழுச்சியை மக்களிடையே எழுப்பியவர்)

சிவகாசியில், 1886 ஆம் ஆண்டு, ஜூன் 16 ஆம் தேதி சுப்ரமணியம்-ஞானாம்பாள் தம்பதிக்கு, மூத்த மகனாக பிறந்த விஸ்வநாத தாஸ், குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின் பால் ஈர்க்கப் பட்டார்.

மகாத்மா காந்தி அவர்கள், 1911 ஆம் ஆண்டு, தூத்துக்குடிக்கு வந்த போது, அவரை வரவேற்றுப் பாடினார். அதன் பின்னர், காந்தியடிகளின் வழி காட்டுதலில், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

எப்போதும் காதி உடைகளையே அணிவார், மற்றவர்களையும் அதையே உடுத்தத் தூண்டுவார்.

தேசபக்தக் கருத்துக்களைக் கொண்ட “கோவலன்”, “வள்ளி திருமணம்”, “அரிச்சந்திர மயான காண்டம்” போன்ற நாடகத்தை நடத்தி, அந்நாளில்  மக்களிடையே சுதந்திர வேட்கையை பரப்பினார்.

சிங்கப்பூர், பர்மா, மலேசியா, இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும் சென்று, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய நாடகங்களை அரங்கேற்றினார்.

போலீசார், 29 வருடங்களில், 29 முறை கைது செய்து, அவரை சிறையில் அடைத்து உள்ளது.

ஒரு சமயம் நாடகம் தொடங்கப் படுவதற்கு முன்பாகவே, அவரை கைது செய்ய போலீசார் நினைத்தனர்.

தகவல் அறிந்த உடனே, விஸ்வநாத தாஸ் அவர்கள், பசும்பொன் தேவரின் உதவியை நாடினார்.

தேவர் தனது சகாக்களுடன் வந்து, நாடக மேடையைச் சுற்றி, காவலுக்கு நின்று இருந்தார். அதைப் பார்த்த போலீசார், பயந்து போய் அவரைக் கைது செய்யாமல், திரும்பிச் சென்றனர். தேச பக்தி நாடகமும் நல்ல படியாக முடிந்தது. அதற்கு அடுத்த நாள், விஸ்வநாத தாஸ் அவர்களே, தஞ்சாவூரில் சரண் அடைந்தார். பின்னர் சிறையில் அடைக்கப் பட்டார்.

‘கொக்கு பறக்குதடி பாப்பா’ பாடல், விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப் பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை அடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக, விடுதலை எழுச்சியை புகுத்தியது இவரது சிறப்பம்சம்.

1940 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ஆம் தேதி, “வள்ளி திருமணம்” என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, நெஞ்சு வலியால் பாதிக்கப் பட்டு, இறைவனடி சேர்ந்தார்.

அவரது நினைவாக, மதுரை திருமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தை, மாநில அரசு, அருங்காட்சியமாக  மாற்றி, அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளது.


Share it if you like it