பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் : ஆளுங்கட்சியின் அலட்சியம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வின் முதல் தேர்வான தமிழ் தேர்வுக்கு கிட்டத்தட்ட 49000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை. அடுத்ததாக நடைபெற்ற ஆங்கிலத் தாள் தேர்வை 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை. இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமானதாக கருதப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை இத்தனை மாணவர்கள் புறக்கணிக்க பல காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் உண்மையில் ஆளும் அரசின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
விஷயம் வெளியான பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறுவதற்கு பதிலாக முன்பே இந்த விவகாரத்தை கவனித்திருந்தால் மாணவர்கள் தேர்வை புறக்கணிப்பதை தடுத்திருக்கலாம்.
மாணவர்கள் தேர்வு எழுதாதததற்கு தோல்வி பயம் தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கில தேர்வுக்கு பயப்படுவது சகஜம் தான். ஆனால் இங்கு தமிழ் தேர்வையே மாணவர்கள் புறக்கணித்திருப்பது தான் அதிர்ச்சி.
தேர்வுகளிலேயே எளிதானதாக கருதப்படும் மொழி தேர்வுக்கே மாணவர்கள் அஞ்சும் நிலை எதனால் வந்தது ? மாணவர்களுக்கு அடிப்படை மொழிப்பாடங்களை சரியாக கற்றுக்கொடுக்காமல் அவர்களை தேர்வு எழுதவும் மதிப்பெண் எடுக்கவும் மட்டும் அழுத்தம் கொடுக்கும் மோசமான கல்வி சூழல் தான் இதற்கு காரணம்.
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பலருக்கு தாய்மொழியான தமிழ் மொழியை பிழையில்லாமல் எழுதவோ, படிக்கவோ தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. தாய் மொழியையே சரியாக எழுத தெரியாதவர்கள், ஆங்கிலத்தையும் கணிதத்தையும் அறிவியலையும் எப்படி புரிந்து கொண்டு தேர்வு எழுதுவார்கள்?
மாணவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம் ? படிப்பறிவில்லாத அல்லது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காத பெற்றோர்களா ? திறமையில்லாத ஆசிரியர்களா? அல்லது கல்விதரத்தை அடிமட்டத்தில் வைத்திருக்கும் தமிழக அரசா?
இந்த வருடம் தமிழ் தேர்வு எழுத வராத மாணவர்களே, ஆங்கில தேர்வையும் எழுத வரவில்லை. இவர்கள் அத்தனை பேரும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விதிமுறைப்படி 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள், அந்த பாடங்களையும் சேர்த்து 12 ஆம் வகுப்பில் எழுதலாம். இதனால் மாணவர்களுக்கு இரண்டு மடங்கு சுமை ஏற்பட்டதால் அவர்கள் தேர்வை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் உச்சக்கட்டமான விஷயம் என்னெவென்றால் தேர்வு எழுதாத மாணவர்களில் பெரும்பாலானோர் பல மாதங்கள் பள்ளிக்கே வராதவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக பள்ளி மாணவர்கள் அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து 3 மாதங்களுக்கு விடுமுறை எடுத்தால் என்ன காரணம் என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்டறிந்து அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஆனால் மாணவர்கள் சுமார் 8 மாதங்கள் பள்ளிக்கு வராத நிலையில் அவர்கள் குறித்த விவரங்களை பள்ளிகள் மறைத்தது ஏன்? பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்கள் வருகை பதிவேட்டில் இருந்து நீக்காமல் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தது ஏன் ? மேலும், கல்வித் துறையின் எமிஸ் இணையதளத்திலும் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்படி என்றால் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி நலத்திட்ட உதவிகள் எங்கே சென்றது ? தற்போதைய தேர்வுக்கு 50000 கேள்வித்தாள்கள், விடைத்தாள்கள் அச்சிடப்பட்டு, அவை பயன்படுத்தாததால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் என்ன ?
இதற்கிடையில் ஆங்கில தேர்வுக்கு பிறகு, தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பள்ளிக் கல்வித்துறை நிறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மார்ச் 16ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “தேர்வு மையம் வாரியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலையும் அதற்கான காரணத்தையும் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.மார்ச் 24-ம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஜூன் தேர்வில் இவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடங்க உள்ள 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வராததை மறைத்த பள்ளி நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கணக்கு காட்டப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமா ? என்பது பற்றி அமைச்சர் எதுவும் கூறவில்லை. ஒரு பொறுப்பான அரசு தரும் பதில் இதுதானா ?
மாணவர்கள் பொதுத்தேர்வை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வை பல்வேறு காரணங்களுக்காக புறக்கணிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க இந்த அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ? அதை ஒழுங்காக எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்குமா ?.
ஆளும் திமுக அரசு மாணவர்கள் நலனுக்காக பாடுபடுவதாக கூறி கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது. பள்ளி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு கூட தயார்படுத்த முடியாத இந்த மாநில அரசு தேசியளவிலான நீட் தேர்வுக்கு பயப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் நாள் விரைவில் வரும்.