சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக, பிரதமர் மோடி உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் போட்டா போட்டி நிலவுகிறது. ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப். பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) ஆட்சிக் கைப்பற்றுவது தொடர்பாக பயங்கர மோதலில் ஈடுபட்டிருக்கின்றன. இப்போரால் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இப்போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செயலாளர் வினய் குவாத்ரா, விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர். சௌதாரி , கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரி குமார், சூடானுக்கான இந்திய தூதர் பி.எஸ்.முபாரக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாகவும், இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனிடையே, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்துக்குச் சென்று, ஐ.நா. தலைவர் அண்டோனியோ குத்ரேஸை சந்தித்தார்.
இந்த சூழலில், சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாகவும், விரும்புவோர் வேறு இடங்களுக்கு பெயரத் தோதாகவும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியது. இதை போரில் ஈடுபட்டிருக்கும் சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார்.