சூடானில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், மீட்கப்பட்ட 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தனர். இவர்கள் சூடானில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய பரபரப்பு தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள்.
சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இதில், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனவே, சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். அந்த வகையில், சூடானில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இவர்களில் 5 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள். இவர்களை தமிழக அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த நிலையில், சூடானில் இருந்து மதுரை திரும்பிய மாணவி ஒருவர் கூறுகையில், “நாங்கள் இருக்கும் பகுதியை கைப்பற்றுவதற்காக ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறினாலும், அவர்களுக்கே தெரியாமால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், எங்கள் பகுதியில் போர் தொடங்கிய நாளிலிருந்து குடிநீர், மின்சாரம் தடைபட்டது. இதனால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். எங்களிடம் உள்ள உணவை சிக்கனமாக பயன்படுத்தி வாழ்ந்தோம். சூடானில் இருந்து இந்தியா வருவதற்கு இந்திய தூதரக அதிகாரி எங்களுக்கு உதவினார், எங்களை பத்திரமாக சொந்த ஊர் வர உதவிய இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி” என்றார்.
அதேபோல, சூடான் நிலவரம் குறித்து கிருத்திகா என்ற மற்றொரு பெண் கூறுகையில், “நான் கடந்த 8 ஆண்டுகளாக சூடானில் வசித்து வருகிறேன். கடந்த 15 நாட்களாக அங்குள்ள சூழல் எங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது. கடந்த 8 நாட்களாக நாடோடிகளாக வாழ்ந்தோம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு ஒரு துணியை மட்டும் கையில் கொண்டு வந்திருக்கிறோம். எங்களை பத்திரமாக அழைத்துவந்த இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி” என்றார்.