மனிதனை உருவாக்க கல்வி நிலையம் அமைத்த சுவாமி சித்பவானந்தர்

மனிதனை உருவாக்க கல்வி நிலையம் அமைத்த சுவாமி சித்பவானந்தர்

Share it if you like it

சுவாமி சித்பவானந்தர்

“பிறருக்காக வாழ்வதே வாழ்க்கை! தமக்காக வாழ்பவர்களெல்லாம் இறந்து போனவர்களுக்கு சமம்” என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். அவரின் வழித் தோன்றலாய், தமிழகத்தில் பல நல்ல அரிய காரியங்களைச் செய்து வந்தவரும், ஆன்மிக நெறியைப் பரப்பியவரும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்து கொண்டவர், சுவாமி சித்பவானந்தர்.

வாழ்க்கைத் துவக்கம் :

கோவை மாவட்டத்தில் மதிப்புமிக்க விவசாயக் குடும்பமொன்றில் 1898 மார்ச் 12ந் தேதி பிறந்த சுவாமிஜி, கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வந்தார். அன்றைய ராமகிருஷ்ண மிஷன் தலைவர் பிரம்மானந்தரும், செயலாளர் சுவாமி சிவானந்தரும் சென்னைக்கு வருகை புரிந்தனர். இது சுவாமியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முன்பே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் உபதேசங்களைப் படித்து அறிந்திருந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சேவைக்கே தமது வாழ்வை அர்ப்பணிக்கத் தீர்மானித்தார்; மடத்தில் சேர்ந்தார். வேலூரிலும், அல்மோராவிலும் சிறிது காலம் இருந்து விட்டு, சென்னைக்கு வந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.

பின்னர் சுவாமி சிவானந்தரின் ஆணையின்படி ஊட்டியில் புதிதாக ஆசிரமம் துவக்கினார். 1926ல் சுவாமி சிவானந்தர் இவருக்கு சன்யாஸ தீட்சை கொடுத்தது, ஊட்டியில் தான். அங்கே மலைப் பாதைகளில் நெடுந் தூரம் ஏறியும், இறங்கியும் நடையாய் நடந்து அரும்பாடு பட்டு, பலரைத் தொடர்பு படுத்தி,  ஒத்துழைப்புப் பெற்று, ஆசிரமத்தை உருவாக்கினார். 1940 வரை அந்த ஆசிரமத்தின் தலைவராக இருந்தார்.

தமிழ்நாட்டின் நிலவரத்தையும், மனிதர்களையும் கூர்ந்து கவனித்து வந்த அவருக்கு, இன்னும் சற்றுத் தீவிரமாகப் பணிபுரியும் உந்துதல் ஏற்பட்டது. ஆஸ்ரமப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களுக்கெல்லாம் சென்றார்; அவர் மனதில் பெரும் எடுப்பிலான திட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்தன.

இறுதியில், தமிழ்நாட்டின் நடுநாயகமான – காவிரிக் கரையில் – திருச்சிக்குப் பத்து மைல் தூரத்தில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை என்ற சிவத்தலத்தில் தமது கேந்திரத்தை அமைக்கத் தீர்மானித்தார். வீடு வீடாகச் சென்று உஞ்ச விருத்தி எடுத்து (உணவுபிட்சை ஏற்று) பகவத் கீதை, தாயுமானவர் பாடல்கள் ஆகிய வகுப்புகள் நடத்தி வந்தார். அவ்வூர் சிவாலயத்திலேயே தங்கியிருந்தார். இவரது ஆன்மிக சக்தியை உணர்ந்த ஊர் மக்கள், புதிதாக ஒரு ஆசிரமம் அமைப்பதில், இவருடன் ஒத்துழைக்க முன் வந்தனர். சுவாமிஜியும் தமது பணிகளைப் பெருமளவில் நடத்த எண்ணியிருந்ததால், அங்கே ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நிறுவினார். கேரளத்தில் இருந்த சுவாமி ஆகமானந்தரை தபோவனத்தைத் துவக்கி வைக்குமாறு அழைத்தார். அது ஆகஸ்டு,1942. அன்று முதல் தபோவனம் படிப்படியாக வளர்ந்து, இன்று தமிழ்நாட்டில் பல கேந்திரங்களைக் கொண்டதாக விரிவடைந்துள்ளது. சுமார் 40 கல்வி நிலையங்கள் தபோவனத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வருகின்றன.

மனிதனை உருவாக்கும் கல்வி :

அறிவாற்றல் மிக்க சில பெண்மணிகளுக்குத் தீட்சையளித்து சன்யாஸினிகளாக்கி மகளிருக்காக சேலத்தில் ஒரு கல்வி நிலையம் உருவாக்கினார். இன்று அந்த நிலையம் பிரம்மாண்டமாக வளர்ந்து, துவக்க நிலை முதல், பட்டமேற்படிப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவிகள் பயிலும் மகத்தான அமைப்பாக மலர்ந்துள்ளது. சுவாமிஜி நிறுவிய அமைப்புகள் அனைத்திலும் ஜாதி வேறுபாடோ, தீண்டாமையோ காண முடியாது. இவ்வகையில் சுவாமிஜி அமைதியுடன் சமூக சீர்த்திருத்தத்தை நடைமுறைப் படுத்தியிருந்தார்.

பாமர மனிதனும் பயன் பெறும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான நகரங்களிலும் கிராமங்களிலும் அந்தர் யோகம்’ நடத்தி வந்தார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவ பாதிரிகளின் மோசமான தந்திரங்களிலிருந்து குடும்பங்களைக் காப்பாற்றி, அவர்கள் அனைவரையும் தீவிர ஹிந்துக்களாக்கியிருக்கிறார்.

மகான்கள் சகவாசம் :

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் அருளுரைகளைத் தொகுத்து எழுதிய ஸ்ரீ மஹேந்திரநாத் குப்தா, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ நாராயண குரு ஆகியோரையும் சந்தித்திருக்கிறார். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை முப்பதாண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அதன் பயனாக திருவாசக விளக்கவுரை வெளியிட்டார்.

வீரசாவர்க்கரின் நெருங்கிய நண்பரான ஸ்ரீவ.வே.சு.ஐயருடன் சுவாமிஜி ஆழ்ந்த நட்பு பூண்டிருந்தார். சேரன்மாதேவியில் அமைந்துள்ள தமது குருகுலத்தை, சுவாமிஜியிடம் வ.வே.சு.ஐயர் ஒப்படைத்துச் சென்றார்.

சமஸ்க்ருதப் பற்று :

சமஸ்க்ருதமே நமது தேசிய மொழி ஆக்கப்பட வேண்டும் என்று சுவாமி சித்பவானந்தர் வலியுறுத்தி வந்தார். தமது பள்ளிகளில் சமஸ்க்ருதம் பயில்வதைக் கட்டாயமாக்கினார்; தமிழக அரசு சமஸ்க்ருதத்தையும் ஹிந்தியையும் அப்பட்டமாக எதிர்த்து வந்த போதிலும், நாட்டின் சமஸ்கிருதத்தைப் பரப்பும் முயற்சியில் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டு வந்தார்.

ஆர்.எஸ்.எஸ். உடன் ஈடுபாடு :

“கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் அமல்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்துபவர் சுவாமிஜி. அவரது ஆஸ்ரமத்தில் எதையுமே குறித்த நேரத்தில் செய்ய அனைவரையும் பழக்கியிருக்கிறார். எந்த ஒரு விஷயம் பற்றியும், நறுக்குத் தெறித்தாற் போல விமர்சனம் வெளியிடும் வழக்கம் சுவாமிஜிக்கு உண்டு.

எனவே ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளும், ஊழியர்களும் அவரது கருத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளையும், ஊழியர்களையும் மிக உன்னிப்பாகக் கவனித்து, அதன் பிறகே அவர் இந்தக் கணிப்பு செய்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு அவர் வைத்த சோதனைகளில் எல்லாம், ஆர்.எஸ்.எஸ். முழு வெற்றியுடன் வெளி வந்தது. எனவே அதன் பின்னர், ஆர்.எஸ்.எஸ். உடன், தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சுவாமிஜி பலமுறை உணர்ச்சி  ததும்ப கூறுவார்:

“நான் தினசரி சங்க ஷாகாவில் நாள் தவறாமல் பங்கெடுக்க முடியாவிட்டாலும், சங்கம் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறதோ அதை நிச்சயமாக நிறைவேற்றுவேன். நான் கணவேஷ் (சீருடை) இல்லாத ஸ்வயம்சேவக். நான் முழுக்க முழுக்க உங்கள் சொத்து. தாயைத் தேடிக் குழந்தைகள் வருவது போல, நீங்கள் எப்போதும் நமது ஆசிரமங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் வந்து கொண்டிருக்க வேண்டும். சங்கத்தின் புனிதப் பணிக்காக தபோவன ஆசிரமங்களையும், மற்ற கட்டடங்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமது சகோதரசன் அனைவரின் சேவைகளையும், ஒத்துழைப்பையும் கூட நீங்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

17/11/1985 அன்று சுவாமிஜி, சமாதி அடைந்தார். ஆனால் என்றென்றும் சுவாமிஜி நம் எல்லோருடைய உள்ளத்திலும் நிறைந்து நிற்கின்றார்.

கொளத்தூர் செந்தில்


Share it if you like it