தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை

தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை

Share it if you like it

அமெரிக்க நாட்டிலே, அனைத்து மத சபையிலே, இந்து மதத்திற்கு முடிசூடல் நடத்தி, இந்து மதத்தின் பெருமைகளையும், இந்திய நாட்டின் பெருமைகளையும், உலகறியச் செய்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான, ஜனவரி 12 ஆம் தேதியை, “தேசிய இளைஞர் தினமாக”, நாம் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றோம்.

அந்த நாளில், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும், விவேகானந்தருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

பெற்றோர்:

1863 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, விஸ்வநாத தத்தருக்கும் –  புவனேஸ்வரி தேவிக்கும் மகனாக விவேகானந்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் “நரேந்திர நாத் தத்தா”.

குருவுடன் சந்திப்பு:

1881 ஆம் ஆண்டு,  நவம்பர் மாதம் ஸ்ரீ ராமகிருஷ்ணரை சந்தித்து, மனநிறைவு அடைந்தார். பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அன்புக்கு உரியவராகி, அவருடைய மடத்திலேயே சேர்ந்து, சமூகத் தொண்டு ஆற்றினார்.

சுற்றுப்பயணம்:

நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு வகையான மக்களின் நிலையை கண்டு அறிந்தார். நமது நாடு, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணத்தை உணர்ந்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிரதிநிதித்துவம்:

அந்த நேரத்தில், 1893 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற இருந்த “உலக சமய மாநாட்டில்”, சுவாமி விவேகானந்தர் பங்கேற்று, இந்து மதத்தை பிரதிநிதித்துவம் செய்து, சொற்பொழிவாற்ற வேண்டும் என, அவரது சகாக்கள் விரும்பினர்.

கன்னியாகுமரியில் கடுந்தவம் புரிந்த விவேகானந்தர், அமெரிக்கா செல்வது என தீர்மானித்தார். அவருடைய செலவிற்காக, சென்னை இளைஞர்கள், பல கட்டமாக பணம் சேகரித்து, 1893 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு வழி அனுப்பினர்.

செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஆற்றிய உரை, உலகையே அதிர வைத்தது. அதன் பின்னர், உலகம் அறிந்த பிரபலம் ஆக மாறினார், சுவாமி விவேகானந்தர்.

தாயகம் திரும்புதல்:

அனைத்து மனங்களையும், அமெரிக்காவில் வென்ற சுவாமி விவேகானந்தர், 1897 ஆம் ஆண்டு, தாயகம் திரும்பினார். இந்த இடைப்பட்ட காலத்தில், பல்வேறு இடங்களில், பல நாடுகளில், பல தலைப்புகளில் சொற்பொழிவுகள் ஆற்றினார். தமிழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்து மதத்தின் பெருமை

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்கமாக, ஜனவரி 26, 1893 ஆம் ஆண்டு, பாம்பனுக்கு வந்து சேர்ந்தார். தமிழகத்தில் முதன்முதலாக அவர் கால்பதித்த இடம், ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் ஆகும்.

அங்கு சுவாமி விவேகானந்தர் அவர்கள், இந்து மதத்தின் மேன்மையைப் பற்றியும், நமது நாட்டின் பெருமையையும் குறிப்பிட்டு பேசினார். அவை, “அரசியலும், வணிகமும், தொழில் நுட்பமும், இராணுவ ஆற்றலும், நமது நாட்டிற்கு, முதுகெலும்பாக இருந்தது இல்லை. நாம் பெற்றது எல்லாம், பெற விரும்புவதெல்லாம், மதம், மதம் மட்டுமே”.

“ஆன்மிகம் என்பது இந்தியாவில், எப்போதும் இருந்து வந்து இருக்கின்றது. ஆன்மீக சக்தியே, அதிக ஆற்றல் கொண்டவை. வரலாறு தொடங்கியதில் இருந்தே, இந்து மதக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பரப்புவதற்கு, எந்த ஒரு பிரச்சாரகரும், வெளிநாட்டிற்கு இந்தியாவில் இருந்து சென்றது இல்லை”.

“இந்துக்களாகிய நாம் மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்து கொண்டு, இறைவனை தியானம் செய்து வந்த ரிஷிகளின் வழித் தோன்றல்கள் எனக் கூறுவதில், பெருமைப் படுகிறோம். நமது மதத்திற்காக, சரியான உற்சாகத்தோடு வேலை செய்ய தொடங்கினால், மறுபடியும் மகத்தானவர்களாக நாம் ஆகி விடுவோம்”.

சேவையின் அவசியம்

ராமேஸ்வரம் கோவிலில், சேவையின்‌ அவசியத்தை   வலியுறுத்தி, சுவாமி விவேகானந்தர் அவர்கள் உரை ஆற்றினார். அதில், “மனத் தூய்மையுடன் இருங்கள், உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு, உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். இதன் பலனாக, உங்கள் இதயம் தூய்மை பெறும், எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார், அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கின்றார்.

நமது இறைவன்

அவர்களின் தெய்வங்கள் எல்லாம், ஒவ்வொரு குழுவிற்கும், ஒரு தெய்வங்கள். யூதர்களின் தெய்வம், அரேபியரின் தெய்வம், அந்த இனத்தின் தெய்வம், இந்த இனத்தின் தெய்வம் என பல தெய்வங்கள் உள்ளது.

சொந்த இனத்தவருக்காக, மற்ற இனத்தவருடன், போரிடும் தெய்வங்கள். ஆனால், எல்லோருக்கும் நன்மை தருகின்ற மிகுந்த கருணை வாய்ந்த தெய்வமாக, நமக்கு தந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும், நண்பனுக்கு உற்ற நண்பனாகவும், ஆன்மாவின் ஆன்மாவாகவும் உள்ள கடவுள் – கருத்து, இந்தியாவில் மட்டுமே உள்ளது.

சைவர்களுக்கு சிவபெருமான், வைணவர்களுக்கு விஷ்ணு என பல தெய்வ வழிபாடு, இந்தியாவில் மட்டுமே உள்ளது.

இந்துக்களுக்கான அறைகூவல்

அளவுக்கு அதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம், இவை நம் இனத்தின் மீது படிந்த வண்ணம் உள்ளது. ஓ தற்கால இந்துக்களே,  மன வசியத்தில் இருந்து, உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி, உங்கள் சாஸ்திரங்களில் உள்ளது, அதை படியுங்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பை போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது, என்பதைப் பாருங்கள்.

தன் உணர்வுடன், செயலில் ஈடுபடுமானால், அது சக்தி பெரும், பல நன்மை கிடைக்கும். எவையெல்லாம் மேலானதோ, அவை அத்தனையும் வரும்.

சீர்திருத்தவாதிகள்

நமது நாட்டில் எப்போதும் சீர்திருத்தவாதிகளுக்கு குறைவு இருந்ததே இல்லை. ஆதி சங்கரர், ராமானுஜர் என ஓருவர் பின் ஒருவராக, நட்சத்திரக் கூட்டங்களின் வரிசை போல, தொடர்ந்து வந்து, சமுதாயப் பணி செய்தனர். அவர்களது பணி இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டு தானே இருக்கிறது.

பட்டியல் இனத்தவர்களைக் கண்டு, ராமானுஜர் மனம் உருகியது. அவரின் வாழ்க்கை முழுவதும், பட்டியல் இனத்தவர்களுக்காக உழைத்தார்.

இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல, அவர்கள் யாவரும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள வில்லை, யாரையும் சபிக்க வில்லை, அவர்களுடைய உதடுகள், வாழ்த்துக்களை மட்டுமே மொழிந்தன.

நம் முன் உள்ள பணி

பல்வேறு அபாயங்கள், இந்தியாவில், நம் கண் முன்னே உள்ளன. ஒன்று உலகாயுதம், மற்றொன்று அதற்கு நேர் எதிரான வடிகட்டின மூட நம்பிக்கை. இரண்டையும், நாம் தவிர்த்தாக வேண்டும். இன்றைய மனிதன், மேலை நாட்டு அறிவு பெற்ற உடனே, தன்னை எல்லாம் தெரிந்து கொண்டவனாக, எண்ணிக் கொள்கிறான். நமது புராதன ரிஷிகளைப் பார்த்து, கேலி சிரிப்பு சிரிக்கிறான்.

நமது மதம் ஒன்று தான், தனி மனிதர்களை சார்ந்து இருக்கவில்லை. லட்சக்கணக்கான மனிதர்களுக்கும், அதில் இடம் உண்டு. இன்னும் எத்தனையோ பேரை நுழைப்பதற்கு போதுமான இடமும், நமது மதத்தில் உள்ளது. ஆனால், அவர்கள் ஒவ்வொருவரும், கட்டாயம் கோட்பாடுகளின் விளக்கமாக இருக்க வேண்டும். இதை நாம் மறக்கக் கூடாது. நமது மதத்தின் கோட்பாடுகள், பத்திரமாக உள்ளன. அதை காலங்காலமாக பாதுகாப்பது, நமது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.

எல்லா ஆற்றல்களும், உங்களுக்குள் இருக்கிறது. உங்களால் எதையும் சாதிக்க முடியும், என்பதை நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என, ஓரு போதும் எண்ணாதீர்கள். இப்போது பெரும்பாலானவரும் நினைத்து கொண்டிருப்பது போல், அவ்வாறு நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் செய்ய முடியும். எல்லா ஆற்றலும், உள்ளுக்குள் இருக்கின்றது என உணர்ந்து இருங்கள், உள்ளே இருக்கும் தெய்வீகத்தை வெளிப் படுத்துங்கள்.

சமுதாய கருத்துக்களாலும், அரசியல் கருத்துக்களாலும், மூழ்கி இருக்கும் இந்தியர்களை, ஆன்மிகக் கருத்துக்களால் நிரப்புங்கள். நமது சாஸ்திரங்களில், நமது புராணங்களில், புதைந்து கிடக்கின்ற அற்புதமான உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகளை, நாடு முழுவதும், நாம் பறை சாற்ற வேண்டும், இதுவே, நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் வேலை.

கடந்த காலத்தில் நடந்தவைகளை, நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். நமது நாட்டை, முன்பு இருந்ததை விட, ஒளிமயமானதாக, சிறப்பானதாக,  உருவாக்க வேண்டும். நமது முன்னோர்களின் அருமைகளையும், பெருமைகளையும், நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்றன ரத்தம், எது என்பதை, நாம் அறிய வேண்டும். அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் செய்த மகத்தான காரியங்களில், நம்பிக்கை வைத்து செயல்பட்டால், சிறப்பான உன்னதமான இந்தியாவை நம்மால் உருவாக்க முடியும்.

சுவாமி விவேகானந்தர் கூறிய அனைத்துக் கருத்துக்களும், இன்றளவும் பொருத்தமாகவே உள்ளன. இந்தியர்கள் அனைவரும், அவரின் வழி நடந்து, அவர் கூறிய கருத்துக்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தினாலே, நமது நாடு உன்னத நிலையை அடைவது நிச்சயம்.

விவேகானந்தர் வழி நடப்போம்..

என்றென்றும் ‌அவர் போதனைகளை நினைவு கூறுவோம்…

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai.

உதவிய நூல்கள்:

கொழும்பு முதல் அல்மோரா வரை…! –  சுவாமி விவேகானந்தர்


Share it if you like it

One thought on “தமிழகத்தில் சுவாமி விவேகானந்தரின் உரை

  1. Well written article. You have taken the gist of Swamiji’s speech and spread in parts throughout.

Comments are closed.