திராவிட சூழ்ச்சியில் இருந்து விடுபட்ட தமிழக பாஜக

திராவிட சூழ்ச்சியில் இருந்து விடுபட்ட தமிழக பாஜக

Share it if you like it

பாஜக என்ற ஒரு கட்சி தேசிய அளவில் ஆளும் கட்சியாக மாநில அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த போதிலும் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் கூட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிக அளவில் பெற்றதில்லை. ஒன்றிரண்டு கிடைக்கும் பட்சத்திலும் அதை வைத்து பெரிதாக அரசியல் செய்ய முடியாத சூழல். இங்கு அதிமுக திமுக என்னும் இரண்டு பெரும் கட்சிகளின் அரசியல் பணபலம் கடந்து பாஜக கட்சிக்கு வலுவான ஒரு களமும் களப்பணி செய்யும் பின்புலமோ இல்லாமல் இருந்தது. அந்த ஒற்றைக் காரணம் வைத்து திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் பாஜகவை பொதி சுமக்கும் கழுதையை போல கையாண்டது. கடந்த காலங்களில் பாஜகவின் தலைவர்களாக யார் வரவேண்டும்? வந்தால் அவர்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அளவிற்கு திமுக வல்லமையோடு இருந்தது .திமுகவை எதிர்த்தால் பாஜகவில் நிம்மதியாக தலைமை பொறுப்பில் இருக்க முடியாது என்ற நிலை. அதிமுகவை பகைத்துக் கொண்டால் திமுக அதிமுக இரண்டின் விரோதத்தையுமே சம்பாதிக்க நேரிடும் என்ற சூழல். திமுக அதிமுக ஆதரவு இருந்தால் மட்டுமே தமிழக பாஜகவில் பொறுப்பிற்கு வர முடியும் என்ற நிலை. அவர்களை எதிர்த்து அரசியல் செய்தால் தமிழக பாஜகவில் இருக்க முடியாது. உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற அளவில் தமிழக பாஜகவை இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்டி படைத்தது.

திராவிட கட்சிகள் பாஜகவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு உள்ளடி அரசியல் செய்தது. திமுக அதிமுக இரண்டும் எதிரி கட்சிகளாக நேரெதிர் அணிகளாக அரசியல் களத்தில் இருப்பதாக தோன்றினாலும் தங்கள் இருவரையும் கடந்து மூன்றாவதாக ஒரு கட்சியோ ஒரு அமைப்போ தமிழகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் ஒரு தெளிவான உடன்பாடு இருந்தது. அது அரை நூற்றாண்டு காலம் பாரதத்தை ஆண்ட காங்கிரஸாக இருந்தாலும் சரி . நேற்று பெய்த மழையில் முளைத்து வந்த தேமுதிக போன்ற சிறிய கட்சியாக இருந்தாலும் சரி தங்களை பொருத்தவரையில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே கோலோச்ச வேண்டும். வேறு யாரும் தலைதூக்கவோ மக்கள் செல்வாக்கு ஆதரவு பெற்று விடவும் கூடாது என்ற வகையில் அவர்கள் தெளிவாக கூட்டணி போட்டு வேலை பார்த்தார்கள்.

இதில் சிறுபான்மை வாக்குகள் பாஜகவிற்கு எதிராக திட்டமிட்டு திருப்பி விடப்பட்ட காரணம் சிறுபான்மை வாக்குகள் எல்லாம் பாஜகவின் எதிர் கூட்டணிக்கு தான் என்ற நிலையில் முழுமையாக திமுக பலனை அறுவடை செய்தது. அதற்காக பாஜக எதிர்ப்பு மோடி எதிர்ப்பு என்ற ஒரு வலுவான எதிர்மறை அரசியலை கட்டமைத்தது .அதற்கு ஊடகங்கள் கட்சிகள் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் அவரவர் சுயலாபத்திற்காக திமுகவின் ஊது குழலாகி பாஜக எதிர்ப்பு அரசியலை செய்தார்கள். பாஜகவோடு கூட்டணியிலேயே இருந்தாலும் அதிமுக இதை எதிர்க்கவோ கண்டிக்கவோ உண்மைகளை வெளிக்கொணரவோ இல்லை. ஆனால் உள்ளூர ரசித்தது. மகிழ்ச்சியோடு இந்த திமுகவின் குழிபரப்பு அரசியலை தட்டிக் கொடுத்து வளர்த்தது. காரணம் திமுக செய்வது பாஜகவிற்கு எதிரான விஷயமாக இருந்தாலும் அது பாஜகவின் வளர்ச்சியை நேர்மறை பிம்பத்தை முடக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பாதிக்கும். அது தங்களின் கட்சிக்கு பல வகையிலும் பலன் தரும். குறிப்பாக தேர்தலில் தங்களை விடவும் குறைந்த வெற்றி வாய்ப்பு வாக்கு வாங்கி வித்தியாசத்திலேயே பாஜகவை நிறுத்தி வைக்கும் போது அதிமுக வலுவான கட்சியாக கூட்டணியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என்ற திட்டமிட்டு அரசியலில் அதிமுக பாஜகவை எப்பாடு பட்டேனும் மட்டம் தட்டி வைக்க வேண்டும் என்ற நிலையில் இறங்கி வேலை செய்தது.

இத்தனை ஆண்டு காலம் பாஜகவை ஒரு மூன்றாம் தர கட்சியாக நடத்தியவர்கள். ஒன்று தங்களோடு கூட்டணிக்கு வரும் இல்லையேல் எதிர் முகாமில் இருக்கும். திமுக அதிமுக என்ற இரண்டில் ஏதேனும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிலேயே தமிழக பாஜக இருக்கும். இருக்க முடியும் .அதை கடந்து தமிழக பாஜகவில் தன்னிச்சையாக காலூன்ற முடியாது. விடவும் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கு தன்னிச்சையாக முடிவெடுக்கும் ஒரு தலைமையும் தங்களின் பணம் அதிகாரம் பதவி சுய லாபம் என்று தாங்கள் கொடுக்கும் எந்த வலைக்கும் கட்டுப்படாத தாங்கள் விரிக்கும் வலையை அறுத்து தன்னுடைய முகத்தையே பொதுவெளியில் அம்பலப்படுத்தும் ஒரு காவல்துறை அதிகாரி தமிழக பாஜகவிற்கு மாநில தலைமை தலைவராக வந்து சேர்ந்ததில் இரண்டு திராவிட கட்சிகளும் அதிர்ந்து நின்றது. தமிழக பாஜகவில் திமுகவும் அதிமுகவும் தங்களுக்கு என்று ஒரு அணியை உருவாக்கி வைத்திருந்தது. அவர்களின் மூலமாகவே தங்களுக்கு தேவையான அனைத்தையும் கடந்த காலங்களில் சாதித்து வந்தது இதன் காரணமாக பல்வேறு உள்ளடி வேலைகள் தமிழக பாஜகவிலும் அரங்கேறியது . இது தமிழக பாஜகவின் வளர்ச்சியை கடந்து மோடி அரசு எடுக்கும் தீர்க்கமான நடவடிக்கைகளில் கூட குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நின்றது. இதில் அதிர்ச்சி அடைந்து தான் தேசிய பாஜக காவல்துறை பின்னணி உளவுத்துறை பின்னணி கொண்ட ஒரு அதிகாரியை தமிழக பாஜகவிற்கு தலைவராக இறக்கியது. அந்த வகையில் திமுக அதிமுகவின் முகமூடிகளாக பாஜகவில் இருந்தவர்களுக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்தது.

மண் பெண் பொன் என்று ஒரு மனிதனை வீழ்த்துவதற்கு எத்தனை ஆயுதங்கள் இருக்குமோ ? அது அத்தனையையும் திமுக பிரயோகித்து தமிழக பாஜகவை முடக்க பார்த்தது இதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிமுக தரப்பில் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தது. கூட்டணி கட்சி என்ற பெயரில் தங்களுக்கு சிக்கல் வரும் போதெல்லாம் பாஜகவின் பின் ஒளிந்து அவர்களின் அரவணைப்பில் தங்களை பாதுகாத்துக் கொண்ட அதிமுக. அதே பாஜகவிற்கும் பாஜகவின் தலைமைக்கோ சிக்கல் நெருக்கடி எழும்போதெல்லாம் அமைதியாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது .அந்த வகையில் முழுமையாக திமுகவின் முயற்சிகளும் அவர்களின் வியூகங்களும் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலக்கப்பட வேண்டும். அல்லது அவர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் . இரண்டும் இல்லை என்றால் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் சேர்ந்து கொடுக்கும் குடைச்சலில் அவர் பொது வாழ்க்கையை விட்டு ஓட வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளடி அரசியல் செய்தது. இதில் அத்தனையும் கண்முன்னே பார்த்த தமிழக பாஜகவின் தலைவர் முதல் கடை கோடி தொண்டன் வரை தமிழக பாஜகவிற்கும் தேசிய பாஜகவிற்கும் திமுக சித்தாந்த ரீதியான எதிரி எனில் அதிமுக உள்ளிருந்தே குழி பறிக்கும் துரோகி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உணர்ந்து கொண்டார்கள்.

என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற விதமாக அவரவர் தாமே முன்வந்து அவரவரின் சுய ரூபத்தை தேசிய பாஜகவிடம் வெளிப்படுத்த அத்தனையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட தேசிய பாஜக சாட்டையை சுழற்றத் தொடங்கியது. தமிழக பாஜகவிற்கு என்று ஒரு வலுவான தலைவர் வேண்டும் . கட்சியை பாதுகாக்க திராவிட கட்சிகளை எதிர் கொள்ள இது போல் ஒரு தலைவர் வேண்டும் என்று தான் அவரை தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறோம். அவரை பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் கோரிக்கையை வைப்பதை முன் விட்டு ஒழுங்காக கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று எச்சரித்து உள்ளடி வேலை பார்த்தவர்களை திருப்பி அனுப்பியது. நேரடியாக கட்சி தலைமையின் மூலம் ஏதும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் மீண்டும் திராவிட கட்சிகளின் வழியாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்க அவர்களின் ஆதரவோடு பல சூழ்ச்சிகளையும் திமுக அதிமுக தொடர்ச்சியாக செய்தது .என்ன விலை கொடுத்தேனும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை விலக்க வேண்டும். என்ன பாடுபட்டேனும் தமிழக பாஜகவை முடக்கி அதை தனது கூட்டணி கட்சி என்ற பெயரில் தட்டி வைக்க வேண்டும் என்று பெரும் பிரயத்தனத்தை அதிமுக செய்தது. அதற்கு முழு உதவியும் ஒத்துழைப்பும் திமுக தரப்பிலிருந்தும் கிடைத்தது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது இது மாநிலத்திற்கான தேர்தல் . திமுகவை எதிர்கொள்ள நாங்கள் எடுக்கும் வியூகம் தான் சரியானது .அதனால் கூட்டணியை எங்களின் வசத்தில் விட்டு விடுங்கள் என்று கேட்ட அதிமுகவிற்கு தேசிய பாஜக முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது .அவர்கள் எவ்வளவோ அறிவுரைகள் வழங்கியும் சில கட்சிகளை கூட்டணியில் நீடிக்க அதிமுக விரும்பவில்லை. உட்கட்சி பூசலையும் முடிவுக்கு கொண்டுவர எடப்பாடி தரப்பு முயலவில்லை. தேசிய பாஜக எச்சரித்தபடியே அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது. அதன் பிறகும் பல்வேறு நெருக்கடிகள் இடர்பாடுகளில் தேசிய பாஜகவின் ஆதரவோடு அதிமுக தரப்பு தன்னை பாதுகாத்துக் கொண்டது .ஆனபோதும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழக பாஜகவிற்கும் அதன் தலைமைக்கும் தன்னால் ஆன அத்தனை உள்ளடி வேலைகளையும் பார்த்தே வந்தது. அனைத்தையும் தேசிய பாஜக அமைதியாக வேடிக்கை பார்த்தது. அதே நேரத்தில் அவர்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் தமிழக பாஜக தலைவருக்கு நூறு சதம் இருந்தது.

கூட்டணி என்ற பெயரிலும் சொந்த கட்சிக்காரர்களே எதிர்க்கும் மனநிலை என்ற பிம்பத்தை கட்டமைத்தும் எப்படியாவது தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலையை அகற்றி விடலாம். தங்களுக்கு தோதான ஒருவரை தலைவர் பதவிக்கு கொண்டு வந்து விட்டு கடந்த காலங்களைப் போலவே பாஜகவை தங்களின் கட்சிக்கும் முறை வாசல் செய்யும் இடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என்று கனவு கண்ட திராவிட கட்சிகளுக்கு தேசிய பாஜக தலைமையின் முழு ஆதரவில் தமிழக பாஜக தலைவர் எடுக்கும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் கலக்கத்தை கொடுத்தது . அதே நேரத்தில் வெற்றி பெற்றால் எங்களால் தான் பாஜக வெற்றி பெற்றது என்று பெருமை பேசுவதும் தோல்வியடைந்தால் பாஜக கூட்டணியில் இருந்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று வெளிப்படையாக அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசி வந்தார்கள். இது கடைக்கோடி அதிமுக தொண்டன் வரை தமிழக பாஜகவை அதன் தலைவர்களை கேவலமாக பேசுவதும் நேரடியாக மறைமுகமாக திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதும் இனியும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் பட்சத்தில் அது பாஜகவிற்கு பெரும் பின்னடைவையும் வீழ்ச்சியை மட்டுமே தரும். தனது இந்த மூன்றாண்டு கால உழைப்பும் கட்சித் தொண்டர்களின் அர்ப்பணிப்பும் விழலுக்கு இறைத்த நீராக தான் போகும் என்ற நிலையில் தமிழக பாஜக தலைவர் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தார். அதற்கு தேசிய தலைமை முழு ஆதரவும் கொடுத்தது.

ஒரு சிறிய முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அலைகழிப்புகளை எல்லாம் கடந்து அவர்களின் உண்மையான முகத்தை அனைவருக்கும் பொதுவெளியில் அம்பலப்படுத்தும் விதமாக இவ்வளவு நெருக்கடிகள் கட்டுப்பாடுகள் தேவையில்லை. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாங்கள் தனியாகவே களம் காண்கிறோம் என்று தமிழக பாஜக வேறு வழி இல்லாத நிலையில் அதிமுகவின் உண்மை முகத்தை தேசிய பாஜகவும் தமிழக பாஜகவும் உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக தன்னிச்சையாக போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் திமுகவும் சரி அதிமுகவும் சரி தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட பாஜக வெற்றி பெற்று விடக்கூடாது என்ற வகையில் கூட்டணி அமைத்து வேலை பார்த்ததை கண் முன்னே பாஜகவின் தொண்டர்களும் பார்த்தார்கள். உளவுத்துறை ரகசிய அறிக்கைகள் மூலம் தேசிய பாஜகவும் அதை தெரிந்து கொண்டது.

இறுதியாக தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தால் கூட்டணி தொடர வாய்ப்பில்லை என்ற கோரிக்கையோடு தேசிய பாஜகவை அணுகினார்கள். ஆனால் தேசிய பாஜக எங்களின் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அனுப்பி வைத்த தலைவர் . எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை திருப்தி இருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் எங்கள் கட்சிக்கு வளர்ச்சிக்கு ஏற்றதாகவே இருக்கிறது. அப்படி இருக்க நாங்கள் எதற்காக அவரை மாற்ற வேண்டும்? நீங்கள் சொல்லும் ஒரு நபரை எங்களின் மாநில கட்சி தலைவராக நாங்கள் ஏன் நியமிக்க வேண்டும்? உங்களது கட்சியில் இதுபோல் ஒரு தலைவரை மாற்ற வேண்டும் நியமிக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அது எப்படி இருக்கும்? என்று எதிர் கேள்வி கேட்டு திருப்பி அனுப்பினார்கள். மேலும் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை தான் நீடிப்பார். கூட்டணியில் இருப்பதும் விலகுவதும் உங்களின் விருப்பம். அதைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. உங்களின் கூட்டணி இல்லாமல் தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம் என்று தெளிவாக சொல்லிவிட்டார்கள்.


Share it if you like it