பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவித்துள்ளது தமிழக அரசு !

பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவித்துள்ளது தமிழக அரசு !

Share it if you like it

வரும் 14, 15 தேதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன் தமிழக மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக, தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இதற்காக செலவாகும் 238 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த பரிசுத் தொகுப்பால், 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர், மாநில மற்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இல்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு தொகை வழங்கப்படவுள்ள நிலையில், தமிழக அரசு 2000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்டு வெள்ளநிவாரணம் ரூ.6000 பெற்றவர்களுக்கும் இந்த ரூ.1000 பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி கொடுக்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக 10 ஆம் தேதியன்றே 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it