ஜேஇஇ தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் முழு மதிப்பெண் பெற்று சாதனை !

ஜேஇஇ தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் முழு மதிப்பெண் பெற்று சாதனை !

Share it if you like it

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ் உட்பட 23 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு,பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 11.70 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

முழு மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற 23 பேரில் தமிழகத்தின் நெல்லையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷும் ஒருவர். இவரது தந்தை காந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். தாயார் ராம்சித்ரா தபால்துறையில் உதவியாளராக பணியாற்றி விருப்பஓய்வு பெற்றுள்ளார். பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் வசிக்கின்றனர்.

அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷை, பள்ளி இயக்குநர் மரகதவல்லி, தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர்புஷ்பவேணி ஐயப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- பொறியியல் கல்விக்கான, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு JEE முதன்மைத் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், 300-க்கு 300 மதிப்பெண் பெற்று, அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் ஒருவராகச் சாதனை புரிந்துள்ளார்.

தமிழக மாணவர்கள் அனைத்துத் தேர்வுகளிலும் சாதனை படைக்கும் திறமை படைத்தவர்கள் என்பதை, தேசிய அளவிலான, NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பெற்று வரும் நமது மாணவர்கள் நிரூபித்துக் கொண்டிருப்பது பெருமையளிக்கிறது.


Share it if you like it