அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?!

அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?!

Share it if you like it

ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் – 26 குடியரசு தினத்தன்று, நமது நாட்டின் பாதுகாப்பு ராணுவ வாகனங்கள், முப்படைகளின் அணிவகுப்பு, துணை ராணுவப் படைகள், மாநில அரசின் ஊர்திகள்,  யூனியன் பிரதேச அரசின் ஊர்திகள், மத்திய அரசின் ஊர்திகள் என கண்கவர் நிகழ்ச்சியாக, அணிவகுப்பு ஊர்வலம், டெல்லியில் நடைபெறும்.

ஊர்திகள் தேர்வு செய்யப் படும் நடைமுறை:

2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, ஊர்திகள் கலந்து கொள்வதற்கான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை, எல்லா மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், அனுப்பி வைத்து இருந்தது. அதில், சுதந்திரம் வாங்கிய 75 வது வருடத்தை,  போற்றும் வகையில், வாகன அணிவகுப்பு இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இதன் அனைத்துப் பணிகளும், மத்திய ராணுவ அமைச்சரவைத் துறையின் மூலம், மேற்கொள்ளப்படும்.

முதல் கட்டமாக அணிவகுப்பு ஊர்தியின் மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும், அது திருப்தி அடைந்த பின்னர், முப்பரிமாண (3D) வடிவில் உருவாக்கப்பட்ட வேண்டும். இவ்வாறு, ஆறு அல்லது ஏழு கட்டமாக நடைபெறும் ஆலோசனைக் குழுவில், சிறப்பாக அமைய பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்படும். அந்த யோசனையை ஏற்று, ஒவ்வொரு ஆலோசனையின் போதும், அலங்கார ஊர்தியின்  அழகை, மாநில அரசு செம்மைப் படுத்தும்.

சிறப்பு விருந்தினர்களுடன், நமது நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  லட்சக்கணக்கான பொது மக்கள் பார்வையிடும், இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு, கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு, 25,000 பேர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப் பட்டனர். இந்த ஆண்டு 24,000 என, பார்வையாளர்களின் எண்ணிக்கை, வெகுவாகக் குறைக்கப்பட்டு உள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் இருந்து, 56 பரிந்துரைகள் வந்து இருந்தன. அவற்றில், சில மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

அலங்கார அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கை 12 ஆக, இந்த ஆண்டு குறைக்கப்பட்டு இருப்பதால், அதற்கு தக்கபடி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இருப்பது உறுதி படுத்தப்பட்டு உள்ளது என்று பாதுகாப்புத்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு, முழுக்க முழுக்க அதிகாரிகளால் தேர்வு செய்யப்படுவதே, வழக்கமான நடைமுறை. இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குழுவில், இலக்கியம், சிற்பக் கலை, கட்டிடக் கலை, நடனம் என அனைத்துத் துறை வல்லுனர்கள் கொண்ட குழுவே, விழாவில் அணிவகுக்க இருக்கும் ஊர்திகளைத் தேர்வு செய்வார்கள்.

எல்லா வருடமும் எல்லா மாநில, யூனியன் பிரதேசங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்குமா?:

2009 ஆம் ஆண்டு , 2010, 2012, 2013, 2014 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து பல ஆண்டுகள், “குஜராத்” அரசின் வாகனம் அணிவகுப்பில், இடம் பெறவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த போதும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா அரசு வாகனம், அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறவில்லை.

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக – சிவசேனா கூட்டணி, 2016 ஆம் ஆண்டு ஆட்சி புரிந்த போதும், மகாராஷ்டிரா அரசு கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறவில்லை.

சிறப்பாக இருக்கும் ஊர்திகள் மட்டுமே, கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும்.

“ஜம்மு-காஷ்மீர்” மட்டுமே தொடர்ந்து பல முறை, பங்கு பெற்று உள்ளது. இதற்கு அடுத்தபடியாக,  “கர்நாடகா” மாநிலம் பங்கு பெற்று உள்ளது.

மேற்கு வங்காளம் 2016, 2017, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் குடியரசு தின அணிவகுப்புகளில் கலந்து கொண்டது. அதில், 2016 ஆம் ஆண்டிற்கான, “சிறந்த  அலங்கார வாகனம்” என்ற பரிசையும், பெற்றது.

இந்த வருடம், மேற்கு வங்காளம் தேர்வு செய்த, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்” என்ற மையக் கருத்தை, மத்தியப் பொதுப்பணித் துறையும் தேர்ந்து எடுத்து இருப்பதால், மேற்கு வங்காளத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

கேரள அரசின் வாகனங்கள் 2018 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கலந்து கொண்டது.

ஆந்திராவிற்கு 2015, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மட்டுமே, வாய்ப்பு கிடைத்தது.

தமிழகம், 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கலந்து கொண்டு இருந்தது. எனினும், 2018 ஆம் ஆண்டு, தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலே கூறப்பட்ட அனைத்தும், மோடி பிரதமராக இருக்கும் போது நடைபெற்றவை.  பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்திற்கு, மத்திய அரசு வஞ்சனை செய்கிறது எனில், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு, எவ்வாறு அனுமதி கிடைத்து இருக்கும்?

மத்திய அரசு மறுப்பு:

இந்த விவகாரம் குறித்து, பாரத பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், “பல்வேறுத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் குழுவே, கலந்து கொள்ள இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கைப் பட்டியலை இறுதி செய்தது. மூன்று கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, 12 வாகன ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 2016, 2017, 2019 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில், தமிழகம் கலந்து கொண்டு இருக்கின்றது. வழிகாட்டு நெறிமுறைகளின் படியே, அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது” என தெரிவித்து உள்ளார்.

2022 அனுமதிக்கப் பட்ட 12 மாநிலம் / யூனியன் பிரதேச ஊர்திகள்:

அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜம்மு -காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்.

பாஜக ஆளாத  மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள், தற்போது நடைபெற இருக்கும், குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்று உள்ளன. ஆனால், பாஜக ஆளும்  மத்தியப் பிரதேசம், அசாம் போன்ற பல மாநிலங்கள் அணிவகுப்புப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதன் மூலமாகவே, எந்த அளவிற்கு நேர்மையாகவும்,  வெளிப்படைத் தன்மையுடனும், இந்த தேர்வு நடைபெற்று இருக்கின்றது என்பதை, நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் 2008, 2010, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி செய்த போதும், தமிழகம் சார்பில் வாகனங்கள், குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறவில்லை. அப்போது,  கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, அதனைப் பற்றி ஏதேனும் வாய் திறந்ததா? என சமூக ஆர்வலர்கள், சமூக வலைத் தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு இதுவரை எந்த பதிலையும், யாரும் கூறவில்லை.

தமிழ் மக்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் மிகுந்த பற்று உடையவர், நமது பாரதப் பிரதமர், மோடி அவர்கள். உலகம் எங்கும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம், தமிழின் தொன்மையையும், பெருமைகளையும் பாராட்டிப் பேசி வருகின்றார்.  வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், “திருக்குறளை” அனைத்து இடங்களிலும் மேற்கோள் காட்டியும் வருகின்றார்.

தனது சொந்த தொகுதியான “வாரணாசியில்” உள்ள பல்கலைக் கழகத்தில், பாரதியாருக்கு என தனி இருக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

ஜனவரி 3, 2022, வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளன்று, அவரது நினைவாக ட்விட்டரில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தமிழ் மீது பெருவாரியான அன்பு கொண்ட பாரத பிரதமர் அவர்கள், நிச்சயம் தமிழகத்திற்கு நல்லதே செய்வார் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

மேலும், சரியான அணுகுமுறையுடன், தெளிவான பார்வையுடன் நடக்கும் ஒரு சம்பவத்தை, அரசியல் லாபத்திற்காக, அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற சந்தேகங்களையும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாழிய செந்தமிழ்.!

வாழ்க நற்றமிழர்.!!

வாழிய பாரத மணித்திருநாடு!!! – பாரதியார்

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://www.indiatoday.in/news-analysis/story/republic-day-parade-2020-tableau-politics-west-bengal-maharashtra-kerala-past-records-1633678-2020-01-03


Share it if you like it