நிதியமைச்சர் மீது அவதூறு: நடிகை ஷர்மிளாவுக்கு ‘செக்’!

நிதியமைச்சர் மீது அவதூறு: நடிகை ஷர்மிளாவுக்கு ‘செக்’!

Share it if you like it

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பொய்யான தகவலை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சீரியல் நடிகையும், டாக்டருமான ஷர்மிளா தேனி சைபர் க்ரைம் போலீஸில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருக்கிறது.

டாக்டர் ஷர்மிளா தமிழ் மற்றும் மலையாள படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஜெயா டி.வி.யில் நடந்த வினாடிவினா நிழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர், விஜய் டி.வி.யில் டாக்டர் மாத்ருபூதத்துடன் இணைந்து புதிரா புனிதமா என்கிற பாலியல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் பிரபலமானவர், தற்போது சன் டி.வி.யில் ஒலிபரப்பாகிவரும் ரோஜா சீரியலில் ‛செண்பகம்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், 3 முறை திருமணம் செய்து கொண்டவர். தமிழ் சீரியலில் நடிக்கும்போது, தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகி ஏ.எல்.மோகன் என்பவரை முதலில் திருமணம் செய்தார். பின்னர், அவரை விவாகரத்து செய்து விட்டு, இலங்கைத் தமிழர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு, அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, 2020-ம் ஆண்டு வி.டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் எஸ்.எஸ்.பாலாஜி என்பவரை 3-வதாக திருமணம் செய்திருக்கிறார். பாலாஜி, தற்போது திருபோரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

டாக்டர் ஷர்மிளா சமீபகாலமாக ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, போலியான தொலைக்காட்சி கார்டு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தவறான கருத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். இதையடுத்து, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐடி. விங்க்) மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜி, ஆன் லைன் மூலம் தேனி போலீஸாருக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், மத்திய நிதியமைச்சர் மீது அவதூறு பரப்பியதாகவும், தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை ஷர்மிளா பரப்பி வருவதாகவும் கூறியிருந்தார். மேற்படி புகார், எஸ்.பி. அலுவலகம் மூலம், வசந்த் பாலாஜி வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், நடந்த விசாரணையில் மேற்படி புகார் ‛சைபர் க்ரைம்’ பிரிவில் வருவதால், அப்புகார் சைபர் க்ரைமுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, தேனி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி மேற்படி புகாரை விசாரித்தார்.

இதன் தொடர்ச்சியாக, முதலில் பா.ஜ.க. ஐ.டி. விங்க் மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜியிடம் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர் ஷர்மிளாவின் சர்ச்சை பதிவுகளை வசந்த் பாலாஜி போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, டாக்டர் ஷர்மிளா தேனி சைபர் க்ரைமில் ஆஜராகும்படி போலீஸார் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து, பா.ஜ.க. ஐ.டி. விங்க் மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜியிடம் கேட்டபோது, ‛‛பிரபல தொலைக்காட்சியின் பெயரில் வரி விதிப்பு தொடர்பான போலியான கார்டு ஒன்றை ஷர்மீளா தனது ட்விட்டரில் பதிவிட்டு, மத்திய நிதியமைச்சரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல, தொடர்ந்து ஷர்மிளா அத்துமீறியும், போலியான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்ததால், ஆன்லைன் மூலம் போலீஸாரிடம் புகார் அளித்தேன். என்னிடம் விசாரணை நடத்தினார்கள்; ஷர்மிளா ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார். இதுபோன்ற போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Share it if you like it