ரூ.30 லட்சம் கொக்கைன் பறிமுதல்: முகமது பாசில் கைது!

ரூ.30 லட்சம் கொக்கைன் பறிமுதல்: முகமது பாசில் கைது!

Share it if you like it

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்த போலீஸார், இலங்கையைச் சேர்ந்த வாலிபர் முகமது பாசில் மற்றும் தொண்டி அனீஸ்நகரைச் சேர்ந்த கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இலங்கையைச் சேர்ந்தவர் முகமது பைசார் மகன் முகமது பாசில். மலேசியாவில் வேலை செய்து திரும்பிய இவர், 2019-ம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழகம் வந்தார். சில காலம் இங்கு தங்கி பணிபுரிந்து வந்தவர், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர், பாஸ்போர்ட் இல்லாமல் இங்கேயே தங்கி விட்ட இவர், போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி. தங்கதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் முகமது பாசிலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அவர் போதைப் பொருள் கடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், நம்புதாளையில் இருந்து சுமார் 30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை இலங்கைக்கு கடத்துவதற்காக தொண்டி கொத்துவாப்பள்ளி பகுதியில் பதுங்கியிருந்தார் முகமது பாசில். தகவலறிந்து விரைந்து சென்ற, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார், முகமது பாசில், அவருக்கு உடந்தையாக இருந்த தொண்டி அனிஸ்நகரைச் சேர்ந்த கணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேற்கண்ட இருவரிடம் இருந்தும் வெள்ளை நிற கொக்கைன் 302 கிராம், பிரவுன் சுகர் 56 கிராம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என்று போலீஸார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்த போலீஸார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இக்கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it