அ.தி.மு.க. கூட்டணி… உறுதி செய்த அமித்ஷா!

அ.தி.மு.க. கூட்டணி… உறுதி செய்த அமித்ஷா!

Share it if you like it

தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே முட்டல் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசியபோது, பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கும் எங்களுக்கும் எந்த் தொடர்பும் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்பது நமது நாட்டின் சட்டம். இதுதான் நடந்திருக்கிறது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருவதால் எந்த பலனும் இல்லை.

நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில்தான் இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும். அதேபோல, தமிழகத்தில் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் இருக்கிறது. எனவே, இக்கூட்டணி தொடர்கிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

அதேசமயம், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சித் தலைவர்களை, காங்கிரஸ் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதற்கு நான் பணியவில்லை. அப்போது நான் குஜராத் அமைச்சராக இருந்ததால் என் மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.

சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், விசாரணை அமைப்புகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள், இன்று அதே காரணத்தைச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. இதுபற்றி அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்றார்.


Share it if you like it