ராமர் கற்பனை கதாபாத்திரமா? அவர் ஒரு அவதார புருஷர். 100 கோடி மக்கள் பின்பற்றும் மதத்தின் நாயகர் என்று தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொந்தளித்த விவகாரம், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ஹிந்துக்களை பொறுத்தவரை, இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவை உண்மையில் நடந்த நிகழ்வுகள் என்று கருதி, அவற்றில் இடம்பெற்றிருக்கும் முக்கிய கதாபாத்திரங்களை கடவுளாக வணங்கி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விதிவிலக்காக திராவிடர் கழகத்தினரும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும், இதிகாசங்களும், புராணங்களும் கற்பனைக் கதை என்று கூறிவருகின்றனர். அதேபோல, ஹிந்துக்கள் வணங்கும் இதர கடவுள்களையும் இல்லை என்று சொல்லி, கேலி கிண்டல் செய்துவருகின்றனர். ஆகவேதான், தி.மு.க.வை ஹிந்து விரோத அரசு என்று ஹிந்துக்கள் கூறிவருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, ஹிந்துக்களால் புனிதமாகக் கருதப்படும், பகவான் இராமர் கட்டியதாக நம்பப்படும் இராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு, அத்திட்டம் நிறுத்தி வைக்கபப்ட்டது. இந்த சூழலில், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, பகவான் இராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, மேற்கண்ட தீர்மானத்தின் மீது பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், “ராமர் கதாபாத்திரம் கற்பனையானது என்று உறுப்பினர்கள் பேசியது வேதனை அளிக்கிறது. இராமர், 100 கோடி மக்கள் பின்பற்றும் மதத்தின் நாயகர். அவர் ஒரு அவதார புருஷர். அப்படிப்பட்டவரை கற்பனை கதாபாத்திரம் என்று சொல்வது வேதனை அளிக்கிறது. ஆகவே, இராமரை கற்பனை பாத்திரம் என்று உறுப்பினர்கள் சொன்னதை நீக்க வேண்டும். மேலும், சேது சமுத்திர திட்டம் ஏற்கெனவே 2,427 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதோடு, இத்திட்டத்தினால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே, மீனவ சங்க பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளை கேட்க வேண்டும். தவிர, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக தொடங்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் சாதக பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்து, தற்போதுள்ள சூழலையும் ஆராய்ந்து நிறைவேற்ற வேண்டும். உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கக் கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆதரிக்கும்” என்றார். 100 கோடி மக்கள் தெய்வமாக வணங்கும் இராமரை, கற்பனை கதாபாத்திரம் என்று தி.மு.க.வினர் சொன்னதற்கு, துணிச்சலாக பதிலடி கொடுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமனின் செயலை, ஹிந்துக்கள் பாராட்டி வருகின்றனர்.
Fine