வார்த்தைக்கு வார்த்தை தமிழகம், தமிழகம் என்று கூறிவிட்டு, இறுதியில் கவர்னர் தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கிறார் என்று கூறிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகையை நெட்டிசன் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு நிறைவில் டெல்லியில் நடந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஒன்று தமிழக கவர்னர் மாளிகையில் கடந்த 4-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் துரதிருஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடக்கிறது. இது நாம் திராவிடர்கள் என்று பிரபல்யப்படுத்துகிறது. இந்த திராவிட கருத்தாக்கம் கடந்த 50 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாம் தேசத்தின் அங்கம் அல்ல, நாம் தேசத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லி வருகிறார்கள்.
மேலும், தமிழகத்தில் ஒரு வித்தியாசமான கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடியவற்றுக்கு எல்லாம் தமிழகம் இல்லை என்று சொல்லும். இது ஒரு வழக்கமாகி விட்டது. பல ஆய்வறிக்கைகள் எழுதப்பட்டிருக்கின்றன, அனைத்தும் தவறான மற்றும் மோசமான புனைகதை. இதை உடைக்க வேண்டும். உண்மை வெல்ல வேண்டும். தமிழகம் என்பது பாரதத்தின் ஆன்மா. பாரதத்தின் அடையாளம். ஆகவே, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று கூறியிருந்தார். இதற்குத்தான் தி.மு.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும் திராவிடர் கழகத்தினரும் சமூக வலைத்தளங்களில் #TamilNadu என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். பதிலுக்கு பா.ஜ.க.வினர் #Thamizhagam என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்தனர். இந்த சூழலில்தான், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி பேசத் தொடங்கியதுமே, அவரை அவமானப்படுத்துவதுபோல தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கவர்னரை வெளியேறச் சொல்லி கூச்சலிட்டனர். ஆனாலும், கவர்னர் எதையும் கண்டுகொள்ளாமல் தனது உரையை நிறைவு செய்துவிட்டே அமர்ந்தார்.
இதன் பிறகு, முதல்வர் ஸ்டாலின் பேசத் தொடங்கினார். அப்போது, அவரை அவமானப்படுத்துபோல கவர்னர் ரவி அவையிலிருந்து வெளியேறினார். இதனிடையே, அவையிலிருந்து வெளியேறிய காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, “தமிழகத்தின் மாண்பு, தமிழகத்தின் மரபு எல்லாம் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரையை படிக்க வேண்டும். ஆனால், கவர்னர் சில சொற்களை விட்டுவிட்டு படிக்கிறார். ஏன் அப்படி படிக்கிறார். தமிழ்நாடு என்ற சொல்ல வரும்போது விட்டு விடுகிறார். திராவிட மாடல் என்று வரும்போதும் ஸ்கிப்பாகி விடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதில் ஹைலைட் என்னவென்றால், செல்வப்பெருந்தகை பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை தமிழகம், தமிழகம், தமிழகம் என்று கூறிவிட்டு, கடைசியில் தமிழ்நாடு என்று வரும்போது கவர்னர் ஸ்கிப்பாகி விடுகிறார் என்று கூறியிருப்பதுதான். மேலும், கவர்னர் தமிழை திணிக்கிறார் என்றும் பேட்டியின்போது உளறிக் கொட்டினார். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் செல்வப்பெருந்தகைைய கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, நெட்டிசன்கள் செல்வப்பெருந்தகையை வச்சு செய்து வருகிறார்கள்.