தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்க மறுத்ததால்தான், அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல், தற்போதும் சிலருக்கு வீழ்ச்சி தொடங்கி இருக்கிறது என்று தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு, கடுமையான கண்டனங்களும் குவிந்து வருகிறது.
தி.மு.க. தலைமையிலான தமிழக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. ஆகவே, தமிழக கவர்னரை மாற்ற வேண்டும் என்று ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க.வினர் திராவிட நாடு, திராவிட மாடல் என்று கூறிவரும் நிலையில், திராவிடம் என்பதே இல்லை என்று கவர்னர் கூறினார். இந்த சூழலில், காசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களை கவுரவிக்கும் வகையில், கவர்னர் மாளிகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்றால் பிரிவினையை ஏற்படுத்துவதுபோல இருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து, இத்தனை நாட்களாக திராவிட நாடு, திராவிட மாடல் என்று கூறிவந்த தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் தமிழ்நாடு என்று சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் ஆக்கினர். இந்த சூழலில், தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழக அரசு கொடுத்த உரையில், திராவிட மாடல், அண்ணா நாமம் வாழ்க, கலைஞர் நாமம் வாழ்க என்றெல்லாம் தி.மு.க. ஆட்சியைப் புகழும் வகையில், சர்ச்சைக்குரிய வகையிலும் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்தார் கவர்னர். எனவே, கவர்னருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின். இதனால், கவர்னர் வெளிநடப்பு செய்தார். மேலும், பொங்கல் விழா அழைப்பிதழிலும் தமிழகம் என்று குறிப்பிட்டார். இதன் காரணமாக, கவர்னரை வசைபாடி வருகிறது தி.மு.க. அண்கோ.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு என்பதோடு தொடர்புபடுத்தி காமராஜரை சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா. அதாவது, தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ ராசா, “காமராஜர் பல நல்ல செயல்களை செய்திருக்கிறார். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சித் தலைவர், 2 பிரதமர்களை உருவாக்கியவர், பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர், தமிழ்நாட்டு மக்களை நேசித்தவர் என்றெல்லாம் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். ஆனால், தமிழ்நாடு என்ற பெயரை அவர் ஏற்கவில்லை. இதன் காரணமாகவே காமராஜருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல், தற்போது தமிழ்நாடு என்று சொல்ல சிலர் மறுக்கிறார்கள். இவர்களின் வீழ்ச்சியும் தொடங்கி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காமராஜர் தமிழகத்துக்குச் செய்யாத திட்டங்களே கிடையாது. பல அணைகளை கட்டியது முதல், மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தது வரை அவரது செயல்பாடுகள் அளப்பரியது. அதோடு, தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு என்று தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பே, காமராஜர் காலத்தில் திறக்கப்பட்ட பல்வேறு கட்டங்கள், திட்டங்கள் திறப்புவிழா தொடர்பான கல்வெட்டுக்களில் தமிழ்நாடு என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, தி.மு.க.வின் ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான ஆ.ராசா, தமிழ்நாடு என்பதை காமராஜர் ஏற்கவில்லை என்று அப்பட்டமாகப் பொய் சொல்லி இருக்கிறார். தி.மு.க. என்றாலே கொலை, கொள்ள மட்டுமல்லாது பொய், புரட்டும்தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது. காமராஜரின் கால்தூசுக்கு சமமாவாரா ஆ.ராசா என்று நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.