தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டமா? வி.ஹெச்.பி. கடும் எதிர்ப்பு!

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டமா? வி.ஹெச்.பி. கடும் எதிர்ப்பு!

Share it if you like it

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கக் கூடாது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணை பொதுச்செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு:- “கன்னியாகுமரி மாவட்டத்தில் மதம் மாறிய காரணத்திற்காகவும், தீண்டாமையை எதிர்த்தமைக்காகவும், கிறிஸ்தவத்தை பரப்பியதற்காகவும் நட்டாலம் நீலகண்ட பிள்ளை என்ற தேவசகாயம் பிள்ளையை ஹிந்து மன்னர் சுட்டுக் கொன்றார் என்று கூறி, தேவசகாயம் பிள்ளைக்கு 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி புனிதர் பட்டத்தை போப் பிரான்ஸிஸ் வழங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கிறிஸ்தவர்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் புனிதர் பட்டம் வழங்கலாம். அது அவர்களது உரிமை. ஆனால், மதமாற்றம் செய்ததற்காக தேவசகாயம் பிள்ளை சுட்டுக்கொல்லப்பட்டார் என்று ஆதாரமற்ற புனைவை வரலாறாக நிறுவ முயன்று இந்தப் புனிதர் பட்டமளிப்பு நடைபெறுவது முழு ஹிந்து சமுதாயத்தையும், குறிப்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஹிந்துக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

திருவிதாங்கூர் வரலாற்று புத்தகங்களிலும், நாகம் எழுதிய திருவிதாங்கூர் வரலாற்றிலும், கிறிஸ்தவ புத்தகங்களிலும் இது ஆதாரமற்ற புனைவு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயம் பிள்ளை 1752-ம் ஆண்டு கொல்லப்பட்டார் என்று கத்தோலிக்க வரலாறு சொல்கிறது. ஆனால், 1774-ல் கிறிஸ்தவர்களுக்கு பேருதவி செய்தது திருவிதாங்கூர் என்று போப் க்ளமெண்ட்-14 கடிதம் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக எந்த அடக்குமுறையும் நடக்கவில்லை என்பதற்கு இதுவே சான்றாகும். அதேசமயம், தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் கொடுப்பதற்கான காரணங்களை விவரிக்கும் கிறிஸ்தவ வலைத்தளங்களில், தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுப்பதன் வாயிலாக தென்தமிழ்நாடு, தெற்கு கேரளம் மற்றும் வடக்கு இலங்கை பகுதிகளில் கிறிஸ்தவம் வளரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நாகலாந்து மற்றும் மிசோரம் பகுதிகள் போல் பாரதத்தின் தென் பகுதிகளையும் கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த பிரதேசமாக உருவாக்க முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. மதமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும், திருக்குறள் கிறிஸ்தவ நூல் என்றும் சைவமும், வைணவமும் கிறிஸ்தவத்திலிருந்து தோன்றியது என்றும் போலி வரலாற்றை உருவாக்கியதுபோல், தேவசகாயம் பிள்ளை வரலாற்றை போலியாக புனைந்து, அதன் வாயிலாக புனிதர் பட்டம் கொடுக்கும் செயலை கண்டிக்கிறோம். கட்டுக்கதைகளை வரலாறாகச் சித்தரிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் செயல் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் செயலாக அமையும் என்று அஞ்சுகிறோம். இந்த சதிச் செயலை மத்திய மாநில அரசுகளும், தேசியவாதிகளும் சமூக அக்கறை உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் உணர்ந்து செயல்படவேண்டும். இதுபோன்ற தேச விரோத, ஹிந்து விரோத பொய் சரித்திரங்களை உருவாக்கக் கூடிய திட்டங்களை எதிர்த்து மக்களைத் திரட்டி உண்மையான வரலாற்றை பாதுகாக்க விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்துப் போராடும்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it