அட மணிப்பூர் என்னங்க… ஆந்திராவில் நடந்த அட்டூழியம் தெரியுமா?!

அட மணிப்பூர் என்னங்க… ஆந்திராவில் நடந்த அட்டூழியம் தெரியுமா?!

Share it if you like it

மணிப்பூர் சம்பவத்தை மிஞ்சும் வகையில், ஆந்திராவில் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பெண்களை நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது புலியாண்டபட்டி கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் குறவர் இன மக்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி கூறினார். பூமதி என்ற பெண் கூறுகையில், “கடந்த ஜூன் 11-ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீஸார், திருட்டு வழக்கு ஒன்றிற்காக எனது கணவர் வைரமுத்துவை தேடி வந்தனர். எனது கணவர் கூலி வேலைக்காக கேரளா சென்றிருப்பதாக கூறியதும், என்னையும் எனது மாமியாரையும் சித்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, திருடியதை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து சித்ரவதை செய்தனர்.

மேலும், என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரசித்தவர்கள், திருட்டை ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டினர். இதன் பிறகு, எனது பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தேய்த்து கொடுமைப்படுத்தினர். அப்போது, நாங்கள் ஒரு கடையை காட்டுவோம். அந்தக் கடையில்தான் திருடிய நகையை கொடுத்திருக்கிறேன் என்று சொல்னால் விட்டு விடுகிறோம். அதோடு, வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட மாட்டோம் என்று கூறி 5 நாட்கள் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டோம். இதன் பிறகு என்னை ஆந்திர சிறையில் அடைத்து விட்டார்கள்.

என்னை மட்டுமல்லாமல் எனது மாமியார் மற்றும் எனது கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5-க்கும் மேற்பட்ட நபர்களை, இதேபோல காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆந்திர போலீஸார் நிர்வாணப்படுத்தி அடித்து திருட்டு வழக்குகளை ஒப்புக் கொள்ளுமாறு கொடுமைப்படுத்தினார்கள். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ஆந்திர போலீஸாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். எங்களுக்கு எங்கு சென்றும் நீதி கிடைக்கவில்லை. எங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்” என்றார் கண்ணீர் மல்க.

மேலும், இரு மாநில போலீஸாரும் இச்சம்பவத்தில் நம்பிக்கைக்குரிய விதத்தில் செயல்படாத காரணத்தால், இவ்வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. நேரடியாக விசாரிக்கக்  வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர். ஆந்திர காவலர்கள் சுமார் 20 பேர் மற்றும் இதற்கு துணைபோன தமிழ்நாடு காவலர்கள் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து தங்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Share it if you like it