தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

Share it if you like it

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக, தமிழகத்தில் சென்னை உட்பட 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

தமிழகத்தின் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வந்திருக்கிறார்கள். தகவலறிந்த போலீஸார், மேற்கண்ட நபர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது, அந்த நபர்கள் துப்பாக்கியை காட்டி போலீஸாரை மிரட்டினர். இந்த வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாதிக் பாஷா, ஜாபர் அலி, கோவையைச் சேர்ந்த முகமது ஆஷிக், காரைக்காலை சேர்ந்த முகமது இர்பான், சென்னையைச் சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது சிறையில் இருக்கும் இக்கும்பலுக்கு, தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது. மேலும், இக்கும்பல் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. விசாரணையில், சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக வலைதளம் வாயிலாக ஆட்களை திரட்டும் பணியிலும், நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்ததும், பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவனது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ரஹ்மத் வீடு, மண்ணடியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களிலும், மயிலாடுதுறை, கோவை, பாண்டிச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கும்பலுக்கும் பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளதா, இவர்கள் கூட்டம் நடத்த நிதி உதவி எங்கிருந்து பெறப்படுகிறது? என்பன உள்ளிட்ட ஆதாரங்களை திரட்டும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இவர்களுக்கு வழங்கியது யார் என்ற ஆதாரங்களை தேடும் பணியிலும், இவர்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்ற தகவலை சேகரிக்கும் பணியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது என்னென்ன ஆவணங்களை எடுத்தனர் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.


Share it if you like it