பேச்சுரிமை, கருத்துரிமை சுதந்திரம் இல்லாவிட்டால் வெள்ளைக்காரனைப் போல் தமிழகத்திலும் வாய்ப்பூட்டு சட்டத்தை போட்டு விடுங்கள் என்று பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் அரங்கேறுவதோடு, போலீஸார் முதல் பொதுமக்கள் வரை அடக்கி ஒடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய ஸ்டாலின் ஆட்சியில் புதிய கலாசாரம் பரவி வருகிறது. அதாவது, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மற்ற கட்சித் தலைவர்களைப் பற்றியோ, பாரத பிரதமரைப் பற்றியோ எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஏன், ஹிந்துக் கடவுள்களை பற்றி ஆபாசமாகவும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பேசினாலும், வீடியோ வெளியிட்டாலும் எந்த நடவடிக்கையும் பாயாது.
அதேசமயம், மாற்றுக் கட்சியினர் தி.மு.க. பற்றியோ, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பற்றியோ, அவரது தந்தை கருணாநிதி பற்றியோ, தி.மு.க.வின் மறைந்த பொதுச்செயலாளர் அண்ணாதுரை பற்றியோ தப்பித் தவறி சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து விட்டால் போதும், தி.மு.க.வின் ஏவல்துறை பாய்ந்து வந்து கைது செய்யும். அவ்வளவு ஏன், தனது இறுதிப்பேருரை மரண சாசனத்தின் 21-ம் பக்கத்தில் தி.மு.க.வினரை மிகவும் கீழ்த்தரமாகக் குறிப்பிட்டிருந்த மறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஈரோடு வெ.ராசாமி நாயக்கர் பற்றிக் கூட விமர்சனம் செய்தாலும், அவர்களை கைது செய்து சிறையில் தள்ளுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு.
அந்த வகையில், ஸ்டாலின் பற்றியும், அவரது தந்தை பற்றியும் விமர்சித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டிருந்த ஜான் ரவி என்பவரை, தமிழகத்திலிருந்து குஜராத் வரை சென்று கைது செய்து சிறையில் தள்ளி இருக்கிறது தி.மு.க.வின் ஏவல்துறை. இதை கண்டித்துத்தான் வீடியோ வெளியிட்டிருக்கிறார் ராணுவ வீரர் குருமூர்த்தி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி, தற்போது மேகாலயாவில் சி.ஆர்.பி.எஃப். வீரராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் நடக்கும் தவறுகளையும், தி.மு.க.வின் அடாவடிகளையும், திருமாவளவன் போன்றவர்களின் தில்லுமுல்லுகளையும் தோலுரித்துக் காட்டி வீடியோ வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜான் ரவியை தி.மு.க.வின் ஏவல் துறை கைது செய்திருப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “ஜான் ரவி கட்சிப் பிரமுகர் என்பதையும் தாண்டி மனிதாபிமானம் கொண்டவர். ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் பிள்ளைகள் தரையில் படுத்துத் தூங்குவதைப் பார்த்த ரவி, இரண்டடுக்கு கட்டில் செய்து கொடுத்திருக்கிறார். அதேபோல, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து தன்னால் இயன்ற பொருளுதவி செய்தவர். உங்களைப்போல ஊரை அடித்து உலையில் போட்டவர் அல்ல. அப்படிப்பட்டவரை பாராட்டி வெகுமதி கொடுப்பதை விட்டு விட்டு, கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறீர்கள்.
மேலும், அவரது வீட்டிற்கு நள்ளிரவில் சென்று இளம்பெண் மட்டுமே இருந்த நிலையில், வீட்டின் கதவை தட்டி இருக்கிறீர்கள். இதே உங்க வீட்டில் பெண்கள் மட்டுமே இருக்கும்போது கதவை தட்டினால் ஏற்றுக்கொள்வீர்களா? தமிழகத்தில் பேச்சுரிமையையும், கருத்துரிமையும் இல்லை என்றால், தமிழத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை போட்டு விடுங்கள். வெள்ளைக்காரன் ஆட்சி செய்ததுபோல ஆட்சி செய்துவிட்டுப் போங்கள். உங்களை யார் கேட்கப்போகிறார்கள். தமிழகத்தில் ராணுவ வீரருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று ஸ்டாலினை கண்டித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.