தமிழகத்தில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகி நிலையில் இருக்கும் அவலம் நீடித்து வருகிறது. திறனற்ற திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று மக்கள் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் லஞ்சமும், ஊழலும், கொலை, கொள்ளைகளும் தலைவிரித்தாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், அரசு வழங்கும் அரிசி, பருப்பு முதல் பள்ளியில் கட்டப்படும் காம்பவுன்ட் சுவர் வரை தரமற்றதாகவே இருக்கும். அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், வழக்கம்போது தரமற்ற பொருட்கள் மற்றும் கட்டுமானம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், காமராஜர் முதலமச்சராக இருந்தபோதிலிருந்தே தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக பரிணாமம் எடுத்த திட்டம் அதே பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம், கூடுதலாக முட்டை, சுண்டல் என பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய பொருட்களுடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் அழுகிப் போய் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
அதாவது, பெரம்பலூர் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 98 சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவில் மாணவர்களுக்கு முட்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான முட்டைகள் ஆலந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில்தான் கடந்த சில நாட்களாகவே முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முட்டைகள் கெட்டுப் போய் உண்ண முடியாத நிலையில் இருப்பதாக அமைப்பாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்து, ஆலந்தூர் ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் ராஜேந்திரன், மாணவர்களுக்கு கெட்டுப்போன முட்டைகளை வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். ஏற்கெனவே சில நாட்கள் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், ஆலந்தூர் ஊராட்சி சத்துணவு மேலாளரோ, 2 நாட்கள் மட்டுமே முட்டைகள் கெட்டுப் போயிருந்ததாகவும், அதிலும் மையத்திற்கு 10 முட்டைகள் அளவிற்குத்தான் கெட்டுப் போயிருந்ததாகவும் சப்பைக்கட்டு கட்டி இருக்கிறார். சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமே ஏராளமான பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் கெட்டுப்போன நிலையில் இருப்பதாக, சமீபகாலமாகவே சத்துணவு அமைப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர். தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த பிறகு, சத்துணவு முட்டை சப்ளை செய்யும் கான்ட்ராக்டர்களிடம் தி.மு.க.வினர் அதிகளவில் கமிஷன் கேட்பதாகவும், இதனால் அவர்கள் கெட்டுப்போன முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி, சத்துணவுக்கு வழங்கப்படும் நல்ல முட்டையுடன் அழுகிய கெட்டுப்போன முட்டைகளையும் கலந்து சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது.