நாய்க்கு கோயில் கட்டிய முதியவர்!

நாய்க்கு கோயில் கட்டிய முதியவர்!

Share it if you like it

நாய் நன்றியுள்ள பிராணி என்பார்கள். ஆனால், அந்த நாய்க்கு நன்றியுள்ள எஜமானராக மாறியிருக்கிறார் ஒரு முதியவர்.

நாயை தெய்வமாக வழங்கும் நாடு நம் நாடு. பைரவர் கோயில் இல்லாத இடங்களே இருக்காது. தவிர, நாய்கள் எப்போதும் மனிதனின் சிறந்த நண்பனாகவே இருந்து வருகின்றன. வீட்டில் எத்தனையோ வளர்ப்புப் பிராணிகள் இருந்தாலும், நாய்களுக்கு இருக்கும் மதிப்பே தனி. ஒரு நாய்க்கும், அதன் எஜமானருக்கும் அப்படியொரு அழகான பிணைப்பு இருக்கும். அந்த எஜமானர் சொல்வதை எல்லாம் அந்த நாய் கேட்கும். அப்படிப்பட்ட நாய் உயிரிழந்து விடவே, அதற்கு கோயில் கட்டி இருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர். இச்சம்பவம்தான் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அருகே இருக்கிறது பிராமணக்குறிச்சி என்கிற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. தற்போது, 82 வயதாகும் இவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாம் என்ற பெயரிலான நாயை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நாய் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. இதனால் மனமுடைந்த முதியவர் முத்து, மறைந்த தனது வளர்ப்பு நாய் டாமின் நினைவாக தனது தோட்டத்தில் கோயில் ஒன்றைக் கட்டி இருக்கிறார்.

இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில், “2010-ம் ஆண்டில் இருந்து டாம் என்கிற நாயை வளர்த்து வருகிறேன். எனது குழந்தையைவிட அந்த நாயைத்தான் அதிகம் நேசித்தேன். துரதிருஷ்டவசமாக 2021-ம் ஆண்டு அது இறந்து விட்டது. அதற்கு கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனவே, தற்போது முதல் கட்டமாக பளிங்கு சிலை செய்திருக்கிறோம். தொடர்ந்து கோயில் கட்ட முடிவு செய்திருக்கிறோம். எனது குடும்பத்தில் கடந்த 3 தலைமுறைகளாகவே யாரும் நாய் இல்லாமல் இருந்ததில்லை. எனது தாத்தா, பாட்டி மற்றும் எனது தந்தை என அனைவரும் நாய் பிரியர்களாக இருந்தனர். அந்த வகையில், நானும் நாய் வளர்த்தேன்” என்றார்.

தொடர்ந்து, முத்துவின் மகன் மனோஜ் கூறுகையில், “நாய் டாமுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது. விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். எனினும், சிகிச்சை பலனின்றி 2021 ஜனவரி மாதம் டாம் இறந்துவிட்டது. மேலும், டாமுக்கு கோயில் கட்ட எனது தந்தை முடிவு செய்தார். இதற்காக, அவரது சேமிப்பிலிருந்து 80,000 ரூபாயை எடுத்து பளிங்குச் சிலை செய்தார். இச்சிலையை எங்களது தோட்டத்தில் வைத்திருக்கிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், முக்கியமான நாட்களிலும் டாம் சிலைக்கு மாலை அணிவிப்போம்” என்றார். நாய்க்கான கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Share it if you like it