மகளின் பாதுகாப்புக்காக 36 ஆண்டுகள் ஆண் வேடம் பூண்ட தாய்!

மகளின் பாதுகாப்புக்காக 36 ஆண்டுகள் ஆண் வேடம் பூண்ட தாய்!

Share it if you like it

ஆணாதிக்க சமூகத்தில் இருந்து தனது மகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்காக அப்பெண்ணின் தாய் கடந்த 36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில் வலம் வந்திருக்கும் ஆச்சரியம் கலந்த உண்மைச் சம்பவம் அரங்கேறி இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். தற்போது 57 வயதாகும் இவர்தான், தலையை மொட்டை அடித்து, லுங்கி, சட்டை அணிந்து ஆண் வேடமிட்டு முத்து என்ற பெயருடன் கடந்த 36 ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார். ஆணாதிக்க சமூகத்தில் தனது ஒரே மகளை பத்திரமாக வளர்ப்பதற்காக இப்படி ஆண் வேடமிட்டதாகக் கூறியிருக்கிறார் பேச்சியம்மாள். தூத்துக்குடி நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த காட்டுநாயக்கன்பட்டி கிராமம். திருமணமான 20 நாட்களிலேயே பேச்சியம்மாளின் கணவர் சிவா இறந்து விட்டார். அப்போது பேச்சியம்மாளுக்கு 20 வயதுதான். கணவர் இறந்த பிறகுதான் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயமே பேச்சியம்மாளுக்குத் தெரியவந்தது.

எனவே, 2-வது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்த பேச்சியம்மாள், 10 மாதங்களில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு சண்முகசுந்தரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ஆனால், பெண்ணான பேச்சியம்மாளால் தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. கட்டுமானத் தளங்களிலும், ஹோட்டல்களிலும், டீக்கடைகளிலும் வேலை செய்த பேச்சியம்மாளுக்கு, எல்லா இடங்களிலுமே பாலியல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்தார். எனவே, விசித்திரமான ஒரு முடிவை எடுத்தார் பேச்சியம்மாள். அதாவது, இந்த ஆணாதிக்க சமூகத்தில் தனியொரு பெண்ணாக வாழ்வது என்பதோடு, பெண் குழந்தையை வளர்ப்பது அதை விடக் கடினம் என்பதை உணர்ந்து கொண்ட பேச்சியம்மாள், தானும் ஆணாக மாற முடிவெடுத்தார்.

இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தவர், நேராக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று மொட்டையடித்துக் கொண்டார். பின்னர், சட்டை மற்றும் லுங்கி உடுத்திக் கொண்டவர் தனது பெயரையும் முத்து என்று மாற்றிக் கொண்டார். இதன் பிறகு, வெளியூர் சென்று பல்வேறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்து என்கிற பேச்சியம்மாள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த ஊரான காட்டுநாயக்கன்பட்டிக்கே மீண்டும் திரும்பி வந்திருக்கிறார். இங்கும் பல்வேறு வேலைகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து தனது மகள் சண்முகசுந்தரிக்கு திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார். தற்போது சண்முகசுந்தரிக்கு 30 வயதாகிறது. பேச்சியம்மாள்தான் முத்து என்கிற விஷயம் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும், அவரது மகள் சண்முகசுந்தரிக்கும் மட்டுமே தெரியுமாம்.

சண்முகசுந்தரிக்கு திருமணமாகி விட்டாலும், தனது உடையை மாற்றத் தயாராக இல்லை பேச்சியம்மாள். “இந்த அடையாளம்தான் எனது மகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்தது. ஆகவே, சாகும் வரை முத்துவாகவே இருக்க விரும்புகிறேன்” என்கிறார் பேச்சியம்மாள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பேச்சியம்மாளின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து ஆவணங்களிலும் முத்து என்றுதான் இருக்கிறது. தனக்கு 57 வயதாகி விட்டதால், இனியும் தன்னால் கடின வேலைகளில் ஈடுபட முடியாது என்பதால், தனது பெண் அடையாளத்திலேயே ஒரு வருடத்திற்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட அட்டையைப் பெற்றிருக்கிறார் பேச்சியம்மாள். இதுகுறித்து பேச்சியம்மாள் கூறுகையில், “எனக்கு சொந்தமாக வீடும் இல்லை, சேமிப்பு எதுவும் இல்லை. விதவை சான்றிதழுக்கும் என்னால் விண்ணப்பிக்க முடியாது. மேலும், வயதாகி விட்டதால் நான் வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். ஆகவே, அரசு எனக்கு சில பண உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைக்கிறார் பேச்சியம்மாள்.

தமிழக அரசு செவிசாய்க்குமா?


Share it if you like it