அழுகிய இறைச்சிகளை பயன்பாட்டுக்கு வைத்திருந்த பார்டர் ரஹ்மத் புரோட்டாக் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்திருக்கும் சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குற்றாலம் என்றாலே நமது நினைவுக்கு வருவது அருவிகள் மட்டுமல்ல, பார்டர் ரஹ்மத் புரோட்டா கடையும்தான். குற்றால அருவிகளில் குளித்த கையோடு, நேராக சாப்பிடச் செல்வது இந்த பார்டர் ரஹ்மத் புரோட்டா கடைக்குத்தான். குற்றாலம் அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியில் இக்கடை செயல்பட்டு வருகிறது. எந்த நேரமும் கடை பிஸியாகத்தான் இருக்கும். இந்த கடைக்கு ரெகுலர் கஸ்டமர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, குற்றால அருவியில் குளிக்க வருபவர்கள் கண்டிப்பாக ஒருமுறையாவது இங்கு வந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்வார்கள். அந்தளவுக்கு பிரபலமானது இக்கடை.
இந்த நிலையில், மேற்கண்ட ரஹ்மத் புரோட்டா கடையில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால், இந்த விஷயம் கடை நிர்வாகத்திற்குத் தெரியவரவே, ஊழியர்கள் மூலம் கடையை பூட்டி விட்டனர். எனவே, உணவுப் பொருட்கள் வைக்கப்படிடிருக்கும் குடோனுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துவிட்டுச் சென்றனர். இத்தகவல் கடை நிர்வாகிகளுக்குத் தெரியவரவே, ஊழியர்களை அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் குடோனுக்கு வைத்த சீலை அகற்றி அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது, குடோனில் 4 மூட்டைகள் மிளகாய் வற்றல் இருந்தது. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த மிளகாய் வற்றல்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மிளகாய் மூட்டைகளை அழிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து, மற்றொரு குடோனில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு சுமார் 200 கிலோவுக்கும் மேலான இறைச்சிகள், பயன்பாட்டிற்கு உகந்தததாக இல்லாமல் கெட்டுப்போயும், அழுகிப்போயும் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சிகள் மீது பினாயில் ஊற்றி அழித்தனர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
பெரும்பாலான குற்றாலம் சுற்றுப் பயணிகள் வந்து சாப்பிட்டுச் செல்லும் பார்டர் ரஹ்மத் புரோட்டா கடையில் கெட்டும், அழுகியும் போன இறைச்சிகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இனி பார்டர் ரஹ்மத் புரோட்டா கடைக்கு சாப்பிடப் போவதில்லை என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். பலரும் அடப் பாவிகளா, இத்தனை நாளா இப்படி கெட்டுப்போன இறைச்சியைத்தான் பயன்படுத்தினீர்களா என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலர், நன்றாகத்தானே வியாபாரம் நடக்கிறது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் கல்லா கட்டுகிறீர்கள். அப்படி இருக்க ஏன் தரமான இறைச்சிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்த மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பார்டர் ரஹ்மத் கடையில் கெட்டுப்போன இறைச்சிகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம், குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.