ரயில்வே பெண் ஊழியரிடம் அத்துமீறல்: அனீஸ் கைது!

ரயில்வே பெண் ஊழியரிடம் அத்துமீறல்: அனீஸ் கைது!

Share it if you like it

தென்காசி மாவட்டத்தில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரியும் பெண் ஊழியரிடம் அத்துமீற முயன்ற அனீஸ் என்கிற இளைஞரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

தென்காசி – நெல்லை ரயில் தடத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் ரயில்வே கேட் அமைந்திருக்கிறது. இந்த ரயில்வே கேட்டின் கீப்பராக பணிபுரிந்து வருபவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நித்யா சந்திரன். கடந்த 16-ம் தேதி வழக்கம்போல நித்யா சந்திரன் பணியில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கேட் கீப்பர் கேபின் அறைக்குள் நுழைந்து நித்யாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். மேலும், அறையில் இருந்த போன் ரிசீவரை எடுத்து அவரது தலையில் தாக்கி இருக்கிறான். இதனால், வலியால் துடித்த நித்யா, கேபினை விட்டு வெளியே ஓடிவந்து, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டிருக்கிறார். இதனால் அச்சமடைந்த அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தில் காயமாடைந்த நித்யா, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பாவூர்சத்திரம் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் விசாரணை நடத்தினர். பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக வட மாநில இளைஞர்கள் பலர் அங்கு முகாமிட்டு வேலை பார்த்து வருகின்றனர். எனவே, இச்சம்பவத்தில் வட மாநில இளைஞர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பர் நித்யாவிடம் அத்துமீற முயன்றது கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்கிற இளைஞர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனீஸை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Share it if you like it