குண்டு வெடிப்பு மற்றும் ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி தவ்பீக்கை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த தொழிலதிபர் அக்பர். இவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தெரிந்துகொண்ட, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் என்பவர், என்.ஐ.ஏ. அதிகாரி போல நடித்து கடந்த 2020-ம் ஆண்டு அக்பரை கடத்திச் சென்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்பரிடம் 3 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இவ்வழக்கில் பயங்கரவாதி தவ்பீக்கின் மனைவி சல்மா உட்பட 6 பேரை முத்தியால்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி தவ்பீக்கை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், தவ்பீக் பல ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இதையடுத்து, சென்னை போலீஸார் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து பயங்கரவாதி தவ்பீக்கை தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான், பயங்கரவாதி தவ்பீக் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலைய அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டான். தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீஸார், தவ்பீக்கை வடக்கு கடற்கரை போலீஸாரிடம் ஒப்படைந்தனர். போலீஸ் விசாரணையில் தொழிலதிபர் கடத்தலுக்கு பிறகு பங்களாதேஷுக்குச் சென்று தலைமறைவானதும், பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், 2002-ம் ஆண்டு மும்பை மற்றும் கேரளாவில் நடந்த கொலை மற்றும் குண்டு வைத்தது தொடர்பான வழக்குகள் உள்பட 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் தவ்பீக் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதோடு, தவ்பீக் ஒரு இஸ்லாமிய அமைப்பை உருவாக்கி, பயங்கரவாத கும்பலுக்கு ஆள்சேர்க்கும் பணியிலும், நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டதாக, தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.