மோடிக்கு ஒரு நீதி… சகாயமேரிக்கு ஒரு நீதி… நல்லா இருக்குப்பா உங்க ஊடக தர்மம்!

மோடிக்கு ஒரு நீதி… சகாயமேரிக்கு ஒரு நீதி… நல்லா இருக்குப்பா உங்க ஊடக தர்மம்!

Share it if you like it

லாவண்யா தற்கொலை வழக்கில் தொடர்புடைய சகாயமேரியை குற்றவாளி என்று பிரபல அரசியல் விமர்சகர் ஶ்ரீனிவாசன் கூறியதை, திருத்திச் சொன்ன நெறியாளர் தம்பி தமிழரசன், நாட்டின் பிரதமரான மோடியை கொலைகாரன் என்று வன்னியரசு சொன்னதை மட்டும் திருத்தாதது ஏன் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஒரு சில ஊடகங்களை தவிர்த்து இதர அனைத்து ஊடகங்களும், தி.மு.க. ஆசி பெற்றைவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக மக்களுக்கு உண்மைச் செய்தி சென்றுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாகவும், விடியல் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படாத வண்ணம் தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு நன்மை செய்யும் பா.ஜ.க. குறித்து அவதூறு பரப்புவதற்கும் மட்டுமே பத்திரிகையாளர்கள், நெறியாளர்கள், ஊடகவியலாளர்கள் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர்.

செந்தில், கார்த்திகைச்செல்வன் வரிசையில் தி.மு.க.வின் மற்றொரு தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் நெறியாளர்களில் ஒருவர் தம்பி தமிழரசன். இவர், ஹிந்துக்களின் உணர்வுகளை யார் புண்படுத்திப் பேசினாலும் மெளனம் காப்பதும், அதற்கு பதில் அளிக்க முயலும் நபர்களை பேசவிடாமல் தடை செய்வதையும் நோக்கமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. சமீபத்தில் இதே போன்று ஒரு ஊடக விவாதம் நடைபெற்றது. இதில், பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம், வி.சி.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னியரசு மற்றும் தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் சரவணன் மற்றும் நித்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, கருத்து வேறுபாடு என ஆயிரம் இருக்கலாம். ஆனால், ஊடக விவாதத்தில் பேசும்பொழுது கவனமாகவும், கண்ணியமாகவும் பேச வேண்டும் என்பதை எல்லாம் மறந்து விட்டு, பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரை கொலைகாரன் என்று ஆபாச பேச்சாளர் வன்னியரசு பேசினார். இதற்கு, தனது கண்டனத்தையோ, எதிர்ப்பையோ தெரிவிக்காமல், நெறியாளர் தம்பி தமிழரசன் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

அந்த வகையில், நேற்றைய தினம் நடைபெற்ற நியூஸ் 18 ஊடக விவாதத்தில் கலந்துகொண்ட பிரபல அரசியல் விமர்சகர் பி.ஆர். ஶ்ரீனிவாசன், நாட்டையே உலுக்கிய லாவண்யா தற்கொலை வழக்கில் தொடர்புடைய சகாயமேரியை குற்றவாளி என்று கூறியதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர் என்று சொல்லுங்கள் என்று தம்பி தமிழரசன் தெரிவித்தார். குஜராத் கலவரத்தில் துளியும் தொடர்பில்லாத பிரதமரை கொலைக்காரன் என்று கூறிய வன்னியரசை கண்டிக்காதவர், சகாயமேரியை குற்றவாளி என்று சொன்னவரை கண்டித்ததின் மூலம் இவரின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.


Share it if you like it