உயிரிழந்த 2 பேர் குடித்த மதுவில் சயனைடு விஷம்: பாருக்கு கள்ளச் சரக்கு கொடுத்தது யாரு?!

உயிரிழந்த 2 பேர் குடித்த மதுவில் சயனைடு விஷம்: பாருக்கு கள்ளச் சரக்கு கொடுத்தது யாரு?!

Share it if you like it

தஞ்சாவூரில் பலியான 2 பேர் குடித்த மதுவில் சயனைடு விஷம் கலந்திருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அந்த பாருக்கு கள்ளச் சரக்கை கொடுத்தது யாரு என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் அருகே பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் மதுபானக் கடை திறப்பதற்கு முன்பே, சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று காலை 11 மணி அளவில் குப்புசாமி என்கிற 60 வயது முதியவரும், விவேக் என்கிற இளைஞரும் மேற்கண்ட பாரில் ஒரே ரக மதுவை வாங்கிக் குடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச் சந்தையில் மது விற்ற நபர் மதுபாட்டில் பெட்டிகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மேற்கண்ட டாஸ்மாக் பார், கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடந்து, மது குடித்து உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையின் அறிக்கை தடயவியல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில்தான் மதுவில் சயனைடு விஷம் இருப்பது தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் பாருக்கு கள்ளச் சந்தையில் மது கொடுத்தது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், பாருக்கு கொடுக்கப்பட்டது டாஸ்மாக் சரக்குதானா அல்லது வெளியாட்கள் போலி மது தயாரித்துக் கொடுத்ததா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில், கள்ள மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it