தோக் பிசின் மொழியில் திருக்குறள்… பப்புவா நியூ கினியாவில் வெளியிட்ட பாரத பிரதமர் மோடி!

தோக் பிசின் மொழியில் திருக்குறள்… பப்புவா நியூ கினியாவில் வெளியிட்ட பாரத பிரதமர் மோடி!

Share it if you like it

பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் சென்றிருக்கும் பாரத பிரதமர் மோடி தோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டிருக்கிறார்.

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறார் பாரத பிரதமர் மோடி. இப்பயணத்தின் முதல் கட்டமாக, ஜப்பான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர், உக்ரைன் அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், குவாட் மாநாட்டிலும் பங்கேற்றார். இதன் பிறகு, ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா நாட்டிற்கு சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பே வரவேற்றார். தொடர்ந்து, அந்நாட்டு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும், பிரதமர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு. இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. திருமதி சுபா சசீந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார். குறளை தோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல் மற்றும் திருமதி சுபா சசீந்திரன் ஆகியோரை பாராட்டுகிறேன். ஆளுநர் சசீந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்தவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடி நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட அன்பிற்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “பப்புவா நியூ கினியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையின்போது பிரதமர் மோடி டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிடுவதை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கலாசாரத்தின் மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறா பிரதமர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it