சுவாமி விவேகானந்தரின் பூர்வீக வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் Dr. APJ அப்துல்கலாம் கூறிய குட்டி கதை

சுவாமி விவேகானந்தரின் பூர்வீக வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் Dr. APJ அப்துல்கலாம் கூறிய குட்டி கதை

Share it if you like it

ஜாம்ஷட்ஜி டாட்டா
(01-10-2004 அன்று சுவாமி விவேகானந்தரின் பூர்வீக வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் Dr.APJ அப்துல்கலாம் கூறிய குட்டி கதை)


“நண்பர்களே, நான் இந்த சூழ்நிலையான சுவாமி விவேகானந்தரின் இல்லத்தில் இருக்கும்போது, 1893ல் ஜப்பான் முதல் கனடா வரை கடல் பயணத்தில் நடந்த உரையாடலை விவரிக்க விரும்புகிறேன். அந்த உரையாடல் இரண்டு பெரிய மனிதர்கள் சுவாமி விவேகானந்தருக்கும் ஜம்ஷெட் டாடா இடையே நடந்தது.  அப்போது சுவாமி ஜி எதற்காக செல்கிறீர்கள் என்று டாடாவிடம் கேட்டார். அதற்கு அவர் நான் எஃகுத் தொழிலை நாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் செல்கிறேன்.  அது 1893 ஆம் ஆண்டு, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம். விவேகானந்தர், “உண்மையில் இது ஒரு அழகான பணி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருப்பினும், நான் உங்களுக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை கொடுக்க விரும்புகிறேன். எஃகு தயாரிக்கும் செயல்முறையைப் பெற நீங்கள் எவ்வளவு தொகையைச் செலவிடுவதோடு நின்றுவிடாமல்,  எஃகு தயாரிப்பதற்கான உலோகவியல் அறிவியலையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”. இந்த விஷயத்தில் மேம்பட்ட ஆராய்ச்சி செய்ய நீங்கள் ஒரு ஆய்வகத்தைத் தொடங்க வேண்டும். இது 1893-ல் வந்த ஒரு தீர்க்கதரிசன அறிவுரை.  இதுவே ‘இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையம்” உருவாவதற்கு வித்திட்டது. டாடா அவர்கள் இதற்காக அவர் சொத்தின் ஆறில் ஒரு பங்கை (1899ல்) ஒதுக்கினார்.  .  

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்

டாட்டா குழுமத்தைத் தோற்றுவித்த ஜாம்ஷட்ஜி நஸர்வான்ஜி டாட்டா அவர்கள் இந்திய தொழில் வளர்ச்சியின் முன்னோடி என்றும் இந்திய தொழில்துறையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளுள் ஒன்றாக பாரத தேசத்தை வளர்ச்சி காண அடித்தளம் அமைத்தவர் அவர்.  அவரது தொலை நோக்கான முயற்சிகளின் விளைவாகவே பாரதத்தில் மாபெரும் நெசவு, இரும்பு எஃகு மற்றும் மின்சக்தி தொழிற்சாலைகள்  மற்றும் சர்வதேசத்தரம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் உருவாயின.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான மக்களுக்கு  வேலைவாய்ப்பு அளித்து கௌரவமாக அவர்கள் வாழ வகை செய்து கொடுத்தது அவரது தீர்க்க தரிசனமே.

இவை மட்டுமல்லாமல், கடந்த 20ஆம் நூற்றாண்டில் உலகின் தலையாய நன்கொடையாளர்களில் முதலிடம் வகிப்பவராகவும் அறிவிக்கப்பட்டவர் ஜாம்ஷட்ஜி டாட்டா அவர்கள். (அவர் அளித்த நன்கொடைகளின் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி  ரூபாய் )


 எங்கிருந்தோ வந்தார்…
சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குத் தப்பி ஈரானிலிருந்து  கடல் மூலம் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி  வந்த பார்ஸிகள் என்ற ஜொராஸ்டிரிய இனத்தவருக்கு  குஜராத்தில் அச்சமயத்தில் அரசராக இருந்த ஜாதவ் ராணா புகலிடம்கொடுத்தார்.   அதற்கு அவர்கள் செய்த பிரதியுபகாரம் போல்  இந்தியாவிற்கு பார்ஸி மக்கள் நல்கிய தவப்புதல்வராகத் திகழ்ந்தவர் ஜாம்ஷட்ஜி டாட்டா அவர்கள்.

 பிறப்பு வளர்ப்பு:

குஜராத், நவ்சாரியில் ஜாம்ஷட்ஜி டாடா அவர்கள்  1839 மார்ச் 3ஆம் நாள் பிறந்தார். தந்தை நஸர்வான்ஜி டாட்டா, தாய் ஜீவன் பாய் டாட்டா.
அவரது முன்னோர்கள் எல்லாம் பார்ஸி மத புரோகிதர்களாகவே (ப்ரீஸ்ட்) இருந்து வந்தனர்.  அந்த வழக்கத்திற்கு மாறாக முதன்முதலாக அவரது தந்தை நஸர்வான்ஜி டாட்டா தொழில் செய்ய இறங்கினார்.

பள்ளிப்படிப்பை முடித்து 14 வயதில் ஜாம்ஷட்ஜி டாட்டா அவர்கள் மும்பையில் தனது தந்தையுடன் சேர்ந்து கொண்டார். தந்தை அவரை எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்க்க, 1858ல் இன்றைய இளங்கலைப் பட்டத்திற்கு இணையான ‘க்ரீன் ஸ்காலர்’ ஆக படிப்பை முடித்தார். மாணவனாக இருக்கும் போதே ஹிராபாய் தாமு என்பவரை மணந்து கொண்டார். மென்மேலும் கல்வி பயில்வதில்  இருந்த ஆர்வத்தை மீறி தொழில் செய்வதையே தன் வாழ்வின் தலையாய இலட்சியமாகத் தேர்ந்து கொண்டார்.

1857ல் சிப்பாய் கலகம் நடந்து இரண்டாண்டுகளே கழிந்திருந்த  சூழ்நிலையிலும், தந்தையார் செய்துவந்த ஏற்றுமதி வர்த்தகத்தில்  (தனது 20ஆவது வயதில்),  தன்னை இணைத்துக்கொண்டார்.

ஒன்பதாண்டுகள் தந்தையுடன் வர்த்தகம் செய்த அனுபவத்தில்
1868ல் வர்த்தக நிறுவனமொன்றை ₹.21,000/- முதலீட்டில் ஆரம்பித்தார். அது தொடர்பாக அவர் முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேரிட்டது.

                         
 நெசவுத் தொழிலதிபர்:

நெசவுத் தொழிலைப் பற்றி அவர் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அவரது முதல் பயணம் அமைந்தது.
நெசவுத் தொழிலில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைத் தாண்டியும் இந்திய நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தார் அவர்.  1869ல் நெசவுத் தொழிலில் அடியெடுத்து வைத்தார். மும்பையின் தொழில் மையத்தில் சிஞ்ச்போக்லி என்ற இடத்தில் ஒரு பாழடைந்த எண்ணெய் ஆலை ஒன்றை விலைக்கு வாங்கி பெயர் மாற்றம் செய்து அதனை ஒரு நெசவாலையாக மாற்றினார். இரண்டு வருடத்திற்குப்பின் அந்த நெசவாலையை நல்ல லாபத்திற்கு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.

அந்நாட்களில், இங்கிலாந்தின் லங்காஷயர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றதாக இருந்தது. ஆகவே நெசவுத் தொழிலைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள   இங்கிலாந்திற்கு நீண்ட நாள் பயணம் ஒன்றை ஜாம்ஷட்ஜி மேற்கொண்டார்.  அங்கு அவர் கண்ட தொழிலாளர்களின் தரம், இயந்திரங்களின் தரம் மற்றும் உற்பத்திப் பொருளின் தரம் ஆகியவை மனம் கவர்வதாக இருந்த போதிலும் அவற்றைத் தனது நாட்டிலும் செய்ய முடியும் என்று கண்டார். தங்களுக்குச் சாதகமாகக் காலனி ஆதிக்கம் கட்டமைத்துக் கொண்ட ஏற்பாடுகளைக் தம்மால் முறியடிக்க முடியும் என்றும் நம்பினார் ஜாம்ஷட்ஜி.  

மும்பையே தொழில் தொடங்கச் சிறந்த இடம் என்றிருந்த காலத்தில் ஜாம்ஷட்ஜி அவர்கள் மாற்றி யோசித்தார்.  பருத்தி உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கு அருகில் இருத்தல், ரயில் ஜங்ஷனுக்கு அருகாமை, தண்ணீரும் எரிபொருளும் தாராளமாகக் கிடைத்தல் ஆகிய மூன்றும் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க இன்றியமையாதது என்று கணித்து, அதன்படி நாக்பூர் பொருத்தமான இடமாக இருந்ததைக் கண்டார்.

1874ல் ஜாம்ஷட்ஜி நாக்பூரில் தனது புதிய முயற்சிக்கு வித்திட்டு மத்திய இந்திய நூற்பு, நெசவு உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தார்.  விக்டோரியா மகாராணி இந்தியப் பேரரசியாக அறிவிக்கப்பட்ட 1877 ஜனவரி முதல் நாளன்று நாக்பூரில் ஆரம்பிக்கப்பட்டது அவரது  ‘ எம்பிரஸ் மில்ஸ்’. ஜாம்ஷட்ஜி தனது 37வது வயதில் இதை நிகழ்த்தினார்.

எம்பிரஸ் மில்ஸ், அந்நாட்களில் யாரும் கேட்டறிந்திராதபடி தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தது.
அதன்பின் குர்லா, மும்பையில் தரம்ஸி மில்லை வாங்கி பின்னர் அதை விற்று அகமதாபாத்தில் உயர் தொழில் நுட்பம் வாய்ந்த “அடவான்ஸ் மில்’லை வாங்கினார்.

இங்கிலாந்து மான்செஸ்டரில் உற்பத்தியாகும் துணிகளைப்போல் உலகத்தரம் வாய்ந்த துணிகளை இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது தான் நமது இறக்குமதி குறையும். தரம் வாய்ந்த துணி உற்பத்தியால் இந்தியா ஒரு ஏற்றுமதி நாடாக வேண்டும் என்பதுவே அவர் கனவு.  எகிப்து நாட்டைப் போல் மிருதுத்தன்மை அதிகமுள்ள பருத்திச் செடிகளை சாகுபடி செய்யும் முறைகளை பின்பற்றச் செய்தார். இந்தியாவில் முதன்முதலாக ‘ரிங் ஸ்பின்டில்’ அறிமுகப்படுத்தி   உற்பத்தி பன்மடங்கு உயர வழிவகுத்தவரும் அவரே.

சுதேசி மில்:

அவரது கடைசி நாட்களில், சுதேசி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தார். நமது தேவைகளுக்கு நாமே உற்பத்தி செய்ய வேண்டும், இறக்குமதிப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கொள்கைகள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. அதன் காரணமாக மும்பையில் புதிதாக அமைத்த நூற்பு ஆலைக்கு ‘சுதேசி மில்’ என்று பெயர் வைத்தார்.


 மூன்று கனவுத் திட்டங்கள்:

1880 முதல் 1904ல் அவர் இறக்கும் வரை ஜாம்ஷட்ஜி தனது வாழ்வின் மூன்று கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தார். அவை: இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவுதல், நீர்மின் சக்தி உற்பத்தி, உலகத்தரம் வாய்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் நிறுவுதல். அவரது வாழ்நாளில் அவை நிறைவேறாவிடிலும் அவற்றிற்காக அவர் போட்ட விதைகளும், எடுத்த முயற்சிகளும், முனைப்புக்களும் அவரது கனவுகளை அவரது காலத்திற்குப் பின்னும் நனவாக்கியிருக்கிறது.

இரும்பு எஃகு தொழிற்சாலை:


இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலை அமைக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இங்கிலாந்து மற்றும் பல நாடுகளை மாற்றியமைத்த தொழிற்புரட்சி இந்தியாவில் நிறைவேற விடாமல் பார்த்துக் கொண்டது காலனி ஆதிக்கம். “கிழக்கு நாடுகளை நவீனப்படுத்த முயலும் முன்னோடிகளைத் தடுக்கும் முட்டுக்கட்டைகள்” என்று தாங்கொணாமல் எழுதுகிறார் அவரது சரிதையை எழுதிய திருவாளர் ஃபிராங்க் ஹாரிஸ்.

இருப்பினும்  ஜாம்ஷட்ஜி அவர்களின் மகன் தோராப் மற்றும் ‘கஸின்’ ஆர்.டி.டாடா இருவரும் எடுத்துக்கொண்ட அசாதாரணமான, அசாத்திய முயற்சிகளாலும் அதுவேயன்றி  ஜாம்ஷட்ஜியின் ஆத்மாவே அவர்களுள்ளிருந்து  நிகழ்த்திக் காட்டியதோ என்னும் வகையிலும் தான் இந்தச் சாதனை படைக்கப்பட்டது. 1907 ஆகஸ்ட் 25 அன்று ஜாம்ஷெட்பூரில் டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்டது. 1912 ல் முதல் எஃகு இரும்பு கம்பிகள் வெளி உருண்டன.

 
ஆசியாவின் முதல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரும்  தொழிற்சாலையாக ‘டாட்டா ஸ்டீல்’ உருவானது. இப்போது உலகின் ஐந்தாவது பெரிய ஸ்டீல் கம்பெனியாக உள்ளது. ஆண்டுதோறும் 28 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தியாகிறது.            


தொழிலாளர் நலன்:

தொழிலாளர்களிடம் அவர் கொண்டிருந்த மரியாதை, அவர்களின் நலனில் அவரது அக்கறை  ஆகியவை அவரது தொலைநோக்குப் பார்வையை நமக்கு உணர்த்தும். குறைந்த வேலை நேரம், காற்றோட்டமான தொழிற்கூடங்கள், ஆண் பெண் தனி மருந்தகங்கள், சேமநிதி, பணிக்கொடை (gratuity), ஆகியவை மேலை நாடுகளில் கட்டாயமாக்கப்படுவதற்கு  முன்பாகவே ஜாம்ஷட்ஜி அவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 1902ல், அதாவது தொழிற்சாலை தொடங்க இடம் வாங்குவதற்கு 5 வருடங்கள் முன்பே மகன் டொராபிற்கு எழுதிய கடிதத்தில் தொழிலாளிகளுக்கான டௌன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதுகிறார்:  ” சீக்கிரமாக வளரும் செடிகள் இருபுறமும் அமைந்த அகலமான வீதிகள், புல்வெளிகள் பூங்காக்கள் அமைப்பதற்கு ஏதுவாக நிறைய இடங்கள், கால்பந்து, ஹாக்கி, பூங்காக்கள் வைக்க இடங்கள்,  கோயில்கள்,   மசூதிகள்,  சர்ச்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென்று  எழுதியிருக்கிறார். இவ்வாறு பொருத்தமான அவரது பெயரைக் கொண்டு உருவானது தான் ஜாம்ஷட்பூர் .

ஜாம்ஷட்ஜியின் கொடைத்தன்மை இந்தியாவை வறுமையிலிருந்து வெளிக்கொண்டு வரும் முயற்சிகளுக்காக இருந்தது. இதற்காக ஜெ.என். டாட்டா என்டோவ்மென்ட் என்ற அமைப்பை 1892ல் நிறுவினார். ஜாதி மத பேதமில்லாமல் இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் மேற்படிப்பு பயில இது உதவி செய்தது. பின்னர் டாட்டா ஸ்காலர்ஷிப் என்று மலர்ந்தது. 1924ல் ஐஸிஎஸ் களில், 40% இந்தியர்கள் டாட்டா ஸ்காலராகவே இருந்தனர்.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ்:


இதுபோல் தான் அவரது கனவான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸும் அவர் இருந்த வரை நிறைவேறாமற் போன ஒன்று. ஆயினும் அவர் உயிர்நீத்து 12 வருடங்களுக்குப் பின் பெங்களூரில் 1911ல் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸ் & டெக்னாலஜி அமைக்கப்பட்டது.

டாட்டா ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் சப்ளை கம்பெனி:


டாட்டா ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் சப்ளை கம்பெனி 1915ல் முதலாவதாக மின்சக்தி உற்பத்தி (40 MW) செய்ய ஆரம்பித்தது.  தற்போது ‘டாட்டா பவர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 13060 MW  உற்பத்தித்திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரும் தனியார் மின்சக்தி நிறுவனமாக உருவாகியுள்ளது.

தனித்தன்மையுடன் உலகத்தரம் வாய்ந்த  ஒரு ஹோட்டல் அமைக்க ஜாம்ஷட்ஜி போட்ட திட்டம் 1903 டிசம்பர் 3 அன்று நிறைவேறியது. மும்பை கொலாபாவில் ‘ தாஜ்மஹல்’ ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டது. மும்பையில் முதன்முதலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்ட கட்டிடம் அதுவே.  அவரது வாழ்நாளிலேயே நிறைவேறிய திட்டம் இது. இந்த ஹோட்டலை கட்டியதன் பின்னணியாகச் சொல்லப்படும் கதை என்னவென்றால்,அன்றைய காலனி ஆதிக்க நாட்களில் மும்பையில் ஒரு ஹோட்டலில் ஜாம்ஷட்ஜி அவர்களுக்கு, அவர் இந்தியன் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாம்.

ஜாம்ஷட்ஜி அவர்கள் 1900 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு தொழில் ரீதியாகப் பயணம் மேற்கொண்டபோது மிகவும் நோய்வாய்ப்பட்டார். அவர் உயிர் நீத்த தினம் 19.05.1904.

நாட்டுப்பற்றின் காரணமாக, தனது தொழில் வெற்றி பாரத நாட்டின் வளமைக்கு வழிவகுக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவராக இருந்தார் ஜாம்ஷட்ஜி.

புதிய இந்தியாவின் தலைமகன்களில் தலைசிறந்த ஒருவராக அவரை தனிப்பட்டவராக அடையாளப்படுத்துவது அவரது ஒப்பற்ற மனிதநேயம் தான்.

தாளொணாத வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கும், உழற்றும் வறுமைப்பிடிக்கும் நடுவே தொழிலாற்றும் குடிமக்களின் மீது அவரது கருணை பொங்கும் இதயத்தின் தாராள மனப்பான்மை தொழிலாளிகளின் மீது நேயமாக மலர்ந்தது.      அவர் மறைந்த பின் தங்களது சொத்தின் பெரும் பகுதியை சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் அறக்கட்டளையின்  வசம் வைத்திருக்கும் பாங்கிலிருந்து டாட்டா நிறுவனத்தின் தனித்துவத்தை அறிந்து கொள்ளலாம்.


Share it if you like it