தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஆதா ஷர்மா, யக்தா யாத்திரைக்குச் சென்றிருந்த நிலையில், நேற்று விபத்தில் சிக்கினார். இது போராட்டக்காரர்களின் சதியாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படம், கேரளாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்கள் எப்படியெல்லாம் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அடிமையாக்கப்படுகிறார்கள் என்பதை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், இப்படம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. எனவே, தமிழகம், மேற்குவங்கத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், 37 நாடுகளில் வெளியான இப்படம், 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, அதிக வசூல் செய்த ஹிந்தி படங்களின் வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், படத்தின் இயக்குநருக்கும் கடந்த சில நாட்களாகவே அடிப்படைவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, ஃபாத்திமாவாக நடித்திருக்கும் கதாநாயகி ஆதா ஷர்மாவிற்கு ஏராளமான அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு பகிரங்கமாகவே பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான், ஆதா ஷர்மா விபத்தில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, ஆதா ஷர்மா ஹிந்து யக்தா யாத்திரைக்கு நேற்று சென்றார். இப்பயணத்தின் போதுதான் அவர் ஒரு சாலை விபத்தில் சிக்கி இருக்கிறார். இச்செய்தி நேற்று முழுவதும் இணையத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து, ஆதா ஷர்மாவின் நிலை குறித்து பலரும் அவருக்கு மெசேஜ் மற்றும் ட்வீட் செய்வதுமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து, ஆதா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “விபத்து குறித்த செய்தி வெளியானதில் இருந்து எனக்கு ஏகப்பட்ட பேர் மெசேஜ் செய்த வண்ணம் உள்ளனர். நான் நலமாகத்தான் இருக்கிறேன். என்னுடன் சேர்த்து தி கேரளா ஸ்டோரி படக்குழுவினர் அனைவரும் நலமாகத்தான் உள்ளோம். பெரிதாக எதுவும் நடக்கவில்லை. உங்கள் அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வந்தனர். இத்திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பலரும் ரகளையில் ஈடுபட்டனர். அதேபோல, படக்குழுவினருக்கும் கொலை மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. ஆகவே, ஆதா ஷர்மாவின் விபத்தும் போராட்டக்காரர்களின் சதியாக இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.