‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை ஏன்? மேற்குவங்கம், தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை ஏன்? மேற்குவங்கம், தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

Share it if you like it

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதித்து ஏன் என்று தமிழகம், மேற்குவங்க மாநிலத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

‘‘தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் 37 நாடுகளில் வெளியானது. ஆனால், இந்தியாவில் மட்டும் தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம், “தி கேரளா ஸ்டோரி’’ திரைப்படம் நாடு முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதனால் பிரச்னை ஏதும் எழவில்லை. மக்களுக்கு ஒரு திரைப்படம் பிடிக்கவில்லையென்றால், அவர்களே பார்க்க மாட்டார்கள், நிராகரித்து விடுவார்கள். பிறகு ஏன் எந்தவித காரணமுமின்றி இத்திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதேபோல, தமிழக அரசு சார்பில் ஆஜரான அமித் ஆனந்த்திவாரியிடம், ‘‘தி கேரளா ஸ்டோரி’’ திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதேசமயம், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தமிழகத்தில் மிரட்டல் வரும் திரையரங்குகளுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மேற்கு வங்கம் விதித்திருக்கும் தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, “திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் வரும் புதன்கிழமைக்குள் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான நோட்டீஸ் இரு மாநில அரசுகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தனர்.


Share it if you like it