இங்குள்ள மக்கள் எல்லோரும் ஆண்- பெண் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் போன தலைமுறை வரையில் இந்த மருதாணி பூச்சை பூசி கொண்டவர்கள் தான். ஆனால் நவீனம் என்ற பெயரில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்ட உன்னதங்களின் இந்த மருதாணி பூச்சும் ஒன்று. இன்று ஒப்பனை அலங்காரம் என்ற பெயரில் நவீன ரசாயன வண்ணங்களும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு பூச்சுகளும் உடலில் அணிந்து கொண்டு ஆரோக்கிய கேட்டை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
வனங்கள் மலைகள் சம வெளிகள் என்று எல்லா இடங்களிலும் இயற்கையின் கொடையாக தாமாக விளைந்து நிற்கும் மருதாணி செடியின் இலைகள் பூக்கள் என்று எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. வெளிர் பச்சை அடர் பச்சை கரும் பச்சை என்று மண்ணின் தன்மைக்கு ஏற்ப விளையும் இந்த மருதாணி இலைகளுடன் எலுமிச்சை முழு பாக்கு சேர்த்து அரைத்து உடலில் அலங்கார பூச்சாக பூசும் வழக்கம் இங்கு காலம் காலமாக இருக்கிறது.
இயற்கையின் கொடையாக தானாக விளையும் மருதாணி இலைகளை அம்மி உரல் என்னும் இயற்கை முறையில் அரைத்து அதனை உடலில் அணிந்து கொள்ளும் போது அது வெறும் அலங்காரப் பூச்சாக மட்டும் இருந்ததில்லை . அகமும் புறமும் அழகும் ஆரோக்கியமும் பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை மருத்துவமாகவும் இருந்தது.
மருதாணி உடல் சூட்டை தணிக்கும் . உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. அந்த வகையில் பெரும்பாலான நோய்களுக்கும் மூல காரணமான உடல் சூடு தவிர்க்கப்பட்டு நம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த மருதாணி அரைப்பை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து தலையில் தடவி வர தலையில் இருக்கும் மண்டை சூடு தணியும். அதன் மூலம் தலையில் ஏற்படும் பொடுகு தொல்லை மண்டை அரிப்பு முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். மயிர் கால்கள் வலுப்பெறும். தலையில் இருக்கும் நுண்கிருமிகள் அழிந்து கூந்தல் அழகும் ஆரோக்கியமும் பெறும். மயிர் கால்கள் வலுவடைந்து நீண்ட அருமையான அடர்த்தியான கூந்தல் வளரும்.
இந்த மருதாணி பூச்சு நம் உடலில் இருக்கும் இறந்த செல்களை வேகமாக அப்புறப்படுத்த உதவுவதோடு அதன் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதையும் தவிர்க்கும். இதனால் மருதாணி பூச்சு விரல்களில் அணியும் போது நகச்சுத்தி வராமல் தடுக்கும். நகங்கள் மூலம் கிருமி தொற்று ஏற்படாமலும் தவிர்க்கும். உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு பித்தம் அகற்றும் தன்மை கொண்டதனால் விரல் நகங்கள் உள்ளங்கை உள்ளங்கால் பாதம் என்ற குறிப்பிட்ட பகுதிகளில் அலங்காரப் பூச்சாக பூசும் வழக்கம் வந்தது. இதன் மூலம் பாத வெடிப்பு மற்றும் உடலில் அதிகப்படியான பித்தம் சேர்வது தவிர்க்கப்பட்டது.
தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு உடலின் அழகியல் மிளிரச் செய்தது. உடல் சூடு பித்தம் தணியும் போது அது ரத்தத்தை சுத்திகரிக்கும் பணிகளை இலகுவாக்கும் . இதன் காரணமாக ரத்த ஓட்டம் சீராகி நரம்பு மண்டலங்கள் உள்ளுறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும். மருதாணியின் மெல்லிய வாசம் சுவாசப் பாதைகளில் இருக்கும் கிருமி தொற்றை சரி செய்யும். இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் சுவாச பாதையில் நோய் தொற்றுகள் வராமல் தவிர்க்க முடியும்.
மருதாணியின் இலைகளை விட அதன் பூக்களில் இருக்கும் நறுமணம் அபூர்வ மருத்துவ குணம் வாய்ந்தது . அதன் மருத்துவ குணமும் நறுமணமும் பெண்களுக்கு கருப்பை சார்ந்த நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது. இதனால் தான் மருதாணி பூச்சு பூசுவதோடு மருதாணியின் பூக்களை தலையில் சூடிக்கொள்ளும் வழக்கமும் இருந்தது. இந்த மருதாணி பூக்களை உலர வைத்து பொடியாக்கி அதை எண்ணெயில் சேர்த்து தலையில் தடவும் வழக்கமும் இருந்தது. இந்த மருதாணி பூச்சு ஒரு வகையில் தலைமுடியின் நிறம் ஊக்கியாகவும் கருமை நிற பூச்சாகவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சி தான் இன்றளவும் நவீனமான கூந்தல் நிறமிகளில் எல்லாம் மருதாணி உள்ளடங்கியது என்ற விளம்பரம் வாசகம் இடம் பெறுவதன் காரணம்.
கடுமையான கோடை வறட்சி வெயிலின் தாக்கம் இருக்கும் காலகட்டங்களில் இந்த மருதாணி பூச்சு நாம் உடலில் பூசிக்கொள்ளும்போது வெப்ப காரணமாக உடலில் ஏற்படும் அதீத சூடு அதன் காரணமான உடல் உபாதைகளை தவிர்க்க முடியும்.ஆனால் இயற்கையில் கிடைக்கும் மருத்துவ குணமும் அழகியலும் சேர்க்கும் இந்த மருதாணி பூச்சை தவிர்த்து விட்டு நவீனம் என்ற பெயரில் ரசாயனங்களையும் உயிருக்கு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வண்ணப் பூச்சுகளையும் பூசி தோல் நோய்களையும் ஆரோக்கிய குறைபாடுகளையும் ஒப்பனை என்ற பெயரில் இன்றைய தலைமுறையினர் விலை கொடுத்து வாங்கி வருவது வேதனை.